×

உயிர் பலி இல்லாத மின்சார வாரியத்தை உருவாக்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி பேச்சு

சென்னை: எதிர்காலத்தில் உயிர் பலி இல்லாத மின்வாரியத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி பேசினார். சென்னை, ஷெனாய் நகரில் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டனர்.  விழாவில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, ‘50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று முன்னாள் முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் இங்கு தலைவரும், பொதுச்செயலாளரும் பெண்ணாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. துறை வெற்றி பெற அனைவரின் முழு ஒத்துழைப்பும் அவசியம். வர்தா புயலில் 5 மணி நேரத்தில் 30% மின்சாரம் வழங்கப்பட்டது. கஜா புயலில் கூட வீடு, விவசாயம் உட்பட பலவற்றிற்கு 1 மாதத்திற்குள் மின்சாரம் வழங்கப்பட்டது. இது சவாலான பணி. பணியாளர்களின் பணியை பாராட்டவே நான் இங்கு வந்தேன். மின்சார வாரியம் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி வருவதால் 5 நிமிடம் மின்சார தடை ஏற்பட்டாலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பொதுமக்களின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இரவு நேரத்திலும் பணியில் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் உயிர் பலி இல்லாத மின்சார வாரியத்தை உருவாக்க வேண்டும். மின்சாரத்துறை வெளிப்படையாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. எந்த பதவிக்கும் நேர்மையாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 3 பதவிகளுக்கு நேரடியாக பதவி உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்றார். தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி: மின் வாரிய தேர்வில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை, ஒளிவுமறைவின்றி தேர்வுகள் நடைபெறுகிறது. பூரண மதுவிலக்கு தான் அரசு கொள்கை, படிப்படியாக கடைகள் குறைக்கப்படுகிறது. மதுபானங்கள் பிளாக்கில் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேங்மேன் தேர்வில் 90 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர், முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. கோர்ட்டில் வீடியோ பதிவை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தேர்வு ஒளிவுமறைவின்றி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Thangamani ,Electricity Board ,talks ,Minister , Create a life-saving, electric board,Minister Thangamani Speech
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...