×

ஆனைமலையில் மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா: மயான பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி, ஆழியார் ஆற்றங்கரையோரம் நடந்த மயான  பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம்,  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 24ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை (9ம் தேதி) பக்தர்கள் குண்டம்  இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான,  மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழியார் ஆற்றங்கரையோரம் நடந்தது.  இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், மாசாணியம்மன் உருவாரம் மண்ணால்  அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு 12  மணியளவில் அம்மன் அருளாளி மற்றும் பக்தர்கள் பலர் ஆழியாற்றில் நீராடி,  கோயிலுக்கு சென்றனர். பின் மாசாணியம்மனுக்கு 12.30 மணியளவில் சிறப்பு பூஜை  நடந்தது.
 
இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியளவில், அம்மன் உருவாரத்துக்கு  சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே,  மாசாணி தாயே’ என்று பக்திகோஷம் எழுப்பினர். சிறப்பு பூஜை நடந்து  கொண்டிருந்தபோது, அம்மன் அருளாளிக்கு அருள் வந்தது, அருள் வந்த அம்மன்  அருளாளி அம்மன் உருவாரத்தை சுற்றியபடி வந்து, அதில் மேல்நின்று ஆடினார்.  பின் உருவாரத்திலிருந்த எலும்பை எடுத்து வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக  ஆடினார். உருமி மேளமடித்தபடி, மாசாணியம்மன் வரலாற்று பாடலை  பாடிக்கொண்டிக்கும்போது, அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் பலருக்கு அருள்  வந்து ஆடினர். நள்ளிரவு துவங்கிய மயான பூஜை, அதிகாலை வரை நடந்தது. இந்த  மயான பூஜையை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு,  திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில்  வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது. மயான பூஜையை அடுத்து, நாளை (9ம் தேதி) குண்டம்  இறங்கும் பக்தர்கள், கோயில் சன்னதியில் காப்புக்கட்டினர்.


Tags : Masaniamman Temple Gundam Festival ,Anaimalai Anaimalai , Anayimalai, Masaniamman, Temple, Mayan Pooja, Devotees
× RELATED ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும்...