×

குடியாத்தம், காட்பாடி பகுதியில் முகாமிட்டுள்ள 40 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள்: வனப்பகுதிக்குள் விரட்ட தீவிரம்

வேலூர்:  குடியாத்தம், காட்பாடி பகுதியில் முகாமிட்டுள்ள 40 காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 12 பேர் கொண்ட வேட்டை தடுப்பு காவலர்களுடன் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையோர கிராமங்களில் அடிக்கடி யானைகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை வனத்துறை அதிகாரிகள் விரட்டினாலும் மீண்டும், மீண்டும் அவை கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன. கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதை வனத்துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து வனப்பகுதிகளுக்கு விரட்டுகின்றனர். ஆனாலும் அங்கிருந்து விரட்டப்படும் யானைகள் மீண்டும் வேறு கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நுழைந்த யானைகள் கூட்டம் இருகுழுக்களாக பிரிந்துள்ளன. ஒரு குழு பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. மற்றொரு குழு காட்பாடி அடுத்த பள்ளத்தூர், ராமாபுரம் கிராமங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த இருநாட்களாக இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் விரட்டினாலும் அந்த யானைகள் வெளியேறாமல் அங்கேயே உள்ளன. யானைகளை சரியான திசையில் வனப்பகுதிக்குள் விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வனத்துறை ஊழியர்களுடன் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக இந்த காட்டு யானைகள் இங்கு வந்துள்ளன. இவற்றை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. நமது மாவட்டத்துக்குள் 40க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. அந்த யானை கூட்டம் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளன.

ஒரு பிரிவு குடியாத்தம், பேரணாம்பட்டு, மோர்தானா பகுதிகளிலும், மற்றொரு பிரிவு திசை மாறி காட்பாடி அடுத்த பள்ளத்தூர், ராமாபுரம், ராஜாதோப்பு, தொண்டான்துளசி பகுதிகளுக்கும் வந்துள்ளது. இந்த யானைகள் ஆந்திர மாநிலம் சித்தப்பாறைக்கு விரட்டியடிக்கப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்துவிட்டன. மீண்டும் பள்ளத்தூர் மற்றும் ராமாபுரம் காட்டு பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. இரவு வரை அங்கேயே முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்களை அனுப்புமாறு வனத்துறை தலைமையிடம் கேட்கப்பட்டது. அதன்பேரில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணிபுரிந்து வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை வேலூர் மாவட்டத்துக்கு வந்தனர். அவர்களை இருபிரிவாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு பிரிவினர் குடியாத்தம், பரதராமி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.மற்றொரு பிரிவினர் பள்ளத்தூர், ராமாபுரம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியை தொடங்கியுள்ளனர். இவர்களுடன் வனத்துறை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அந்த யானைகள் அதன் திசையில் வனப்பகுதிக்குள் திருப்பிவிடப்படும். இந்த பணி இரு நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்துக்கு 40 யானைகள் எப்போதும் வந்ததில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.


Tags : area ,Katpadi ,Gaddatti ,Gaddatham , Wild Elephant, Forest Service, Range, Attakasam
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு