×

பிகில் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு

சென்னை:  பிகில் பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை இன்றுடன் நிறைவு பெற்றது. இதுதொடர்பாக, போலி கணக்கு மூலம் வருமானத்தை குறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஜய்யிடம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பிரமுகரும், சினிமா பைனான்சியருமான அன்புச்செழியன் வீடுகளில் உள்ள ரகசிய அறைகளில் இருந்து சாக்கு மூட்டையில்  இருந்த ரூ.77 கோடி ரொக்கப் பணம் மற்றும் ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  ஏ.ஜி.எஸ். சினிமா தயாரிப்பு குழுமம் உட்பட 38 இடங்களில் 2வது நாள் நடந்த சோதனையில் பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடிகர் விஜய் சமீபத்தில் பிகில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது.  இதை சினிமா தயாரிப்பாளர் அகோரத்தின் மகள் அர்ச்சனா கல்பாத்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த கணக்கும் நடிகர் விஜய் வருமான வரித்துறையிடம் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த விசாரணை நேற்றுடன் 30 மணி நேரத்தை தாண்டி நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, நடிகர் விஜய்யிடம் 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் மதுரை காமராஜர் சாலை, தெப்பக்குளம் கனி தெருவை சேர்ந்த அன்புச்செழியன்(45) வீடுகளிலும் சோதனை நடந்தது. அதிமுக பிரமுகரான இவர் திரைப்பட பைனான்சியர். சென்னை தி.நகர் ஜிஎன்செட்டி சாலையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், பிகில் படத்துக்கு ஏஜிஎஸ் குழுமத்திற்கு 100 கோடிக்கு மேல் பணம் வட்டிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இவரது தாயார் வீடு மதுரை கீரைத்துறையில் உள்ளது.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புசெழியனின் திரைப்பட அலுவலகம், சென்னையில் உள்ள திரைப்படம் அலுவலகம், வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், அன்புசெழியன் நண்பர் சரவணன் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் அன்புசெழியன் மதுரை வீட்டில் 17 கோடி பணமும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து கட்டுக்கட்டாக சாக்கு மூட்டையில் இருந்த 60 கோடி ரொக்க பணம் என மொத்தம் 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை 10 பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் வரை எண்ணினர். பின்னர் மதுரை மற்றும் சென்னையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத 77 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து 300 கோடி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் 3 வாகனங்களில் ஏற்றப்பட்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சினிமா தயாரிப்பாளரும் அதிமுக பிரமுகருமான அன்புச்செழியன் தான் ஏஜிஎஸ் குழுமத்திற்கு தொடர்ந்து பைனான்ஸ் செய்து வந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது. அன்புச்செழியன் பினாமிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி சோதனை, இன்றும் நீடிக்கும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை முதல் இன்று அதிகாலை 3 மணி வரை வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தினர். கிட்டத்தட்ட 4 நாட்களாக நடைபெற்ற சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  இந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை இன்றுடன் நிறைவு பெற்றது.

Tags : Completion ,Biggle Financials Home , Pickle, financier, loved one, income tax, check, completion
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா