×

கோயம்பேடு 100அடி சாலை ஆக்கிரமிப்புகளால் மேம்பால பணியை முடிப்பதில் சிக்கல்: நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்

அண்ணாநகர்: கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் மேம்பால பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோயம்பேடு 100 அடி சாலையை ஒட்டி பேருந்து நிலையம், மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கோயம்பேடு 100 அடி சாலையை ஒட்டியுள்ள வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து ஷெட், மேற்கூரை, விளம்பர பலகை மற்றும் ெபாருட்களை வைத்துள்ளனர். இதனால், சாலை குறுகி, தினசரி கடும் நெரிசல் ஏற்படுகிறது.  

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பாதசாரிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், அவர்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இங்கு வாகன நெரிசலை குறைக்க, கடந்த 2015ம் ஆண்டு ₹93.5 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இப்பணிகள் இதுவரை முடிவடையாததால், இங்கு நாள்தோறும் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இங்கு காலை, மாலை மற்றும் நள்ளிரவு வரை வாகன நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோயம்பேடு 100 அடி சாலையின் இருபக்கமும் ஆக்கிரமித்து ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டிடங்களை எழுப்பியுள்ளன. மேம்பால பணிக்காக இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதில் ஒரு சிலர் மட்டும் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்து வருகின்றனர். இதனால் இங்கு மேம்பால பணிகளை தொடர முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மேம்பால பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : motorists ,Coimbatore ,completion , Coimbatore, 100 ft Road, Improvement
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...