×

நுழைவு வாயிலில் கற்பூரம் கொளுத்த எதிர்ப்பு திருச்செந்தூரில் பக்தர்கள் - போலீசார் மோதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் நுழைவு வாயில் பகுதியில் கற்பூரம் கொளுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பக்தர்கள், போலீசார் இடையே இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (8ம்தேதி) தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி விரதமிருந்த பக்தர்கள் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், செங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ரோடுகளில் பச்சை வேட்டி அணிந்த பக்தர்கள் சாரை சாரையாக செல்வதை காண முடிகிறது. சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து வரும் பாதயாத்திரை பக்தர்கள் குரும்பூர் அம்மன்புரம் வழியாக குமாரபுரம் நுழைவு வாயில் வந்து அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் குமாரபுரம் நுழைவு வாயிலில் அமர்ந்து சூடம் கொளுத்தி சுவாமியை வழிபட்டு அதன்பிறகு புறப்பட்டுச் செல்வார்கள். இன்று காலை வழக்கம்போல் பக்தர்கள் நுழைவு வாயிலில் அமர்ந்து கற்பூரம் கொளுத்தி சுவாமியை வழிபட்டுக் கொண்டிருந்தனர். நாளை தைப்பூசம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்திருந்த பக்தர்களிடம் ‘நீங்கள் எழுந்து செல்லுங்கள்’ போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது என்று கூறினர். ஆனால் பக்தர்கள் எழுந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி அனுப்பினர். இதனால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசாரை கண்டித்து பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாளை - திருச்செந்தூர் ரோட்டில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Pilgrims ,Tiruchendur ,clash , Tiruchendur
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்