×

நாமக்கல் முட்டை விலை நிர்ணயத்தில் மோதல் என்இசிசி அலுவலகத்துக்கு பண்ணையாளர்கள் பூட்டு : மேலாளரை தாக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல்லில், முட்டை விலை நிர்ணய குளறுபடியில் உச்சக்கட்ட மோதல் எதிரொலியாக என்இசிசி அலுவலகத்துக்கு பண்ணையாளர்கள் பூட்டு போட்டு பூட்டினர். மேலும், மேலாளரை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000 கோழிப்பண்ணைகளில், தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைக்கு என்இசிசி(தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு) என்ற அமைப்பு தினமும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாக, அடிக்கடி பண்ணையாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில்,கடந்த 4 நாளில் முட்டை விலை 35 காசுகள் வரை குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பிற்பகல் 12 மணிக்கு பரமத்தி ரோட்டில் உள்ள என்இசிசி மண்டல அலுவலகம் முன் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன், என்இசிசி மத்திய குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் திரண்டனர்.

அப்போது, அலுவலகத்தில் என்இஇசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ் இல்லை. அங்கிருந்த பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், சேர்மன் ஓசூரில் இருப்பதால் இன்று வரமாட்டார் என கூறினார். சேர்மன் வந்து பதில் கூறிய பிறகே முட்டை விலை நிர்ணயம் செய்யவேண்டும் எனக்கூறி, பொதுமேலாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, என்இசிசி அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்ட முயன்றனர். இதற்கு பொதுமேலாளர் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்தார். இதனால்,ஆவேசமடைந்த சில பண்ணையாளர்கள் அவரை தாக்க முயன்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமேலாளர் உள்ளிட்டோர் வெளியேறினர். பின்னர், கோழிப்பண்ணையாளர்கள் 3 வாசல்களையும் வேறு பூட்டு போட்டு பூட்டிவிட்டு வெளியில் நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர். போலீசார் வந்து சமாதானம் செய்து அனுப்பினர். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் எம்.பி. இன்று அங்கு வருகிறார். அவரிடம் பேசி ஊர்வலம் நடத்துவோம் பண்ணையாளர்கள் கூறினர்.

நாமம் போட்ட முட்டைகள் வீச்சு


என்இசிசி மண்டல அலுவலகத்துக்கு வந்த பண்ணையாளர்கள் ஒரு ட்ரேவில் முட்டைக்கு நாமம் போட்டு எடுத்து வந்திருந்தனர். திடீரென ஆவேசம் அடைந்தவாறு, அந்த முட்டைகளை உடைத்து  அலுவலகம் மீது வீசினார்கள். இதுகுறித்து மத்தியக்குழு உறுப்பினர் நாகராஜன் கூறுகையில், ‘டிமாண்ட் உள்ள நேரத்தில் என்இசிசி விலையை குறைத்து வருகிறது. இதனால்,தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை. என்இசிசி சேர்மன் வாட்ஸ்அப் மூலம் அவர் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்கிறார். இனி அதை அனுமதிக்கமாட்டோம்,’என்றார்.



Tags : office clash ,NECC ,Namakkal , Farmers lock ,NECC office clash ,Namakkal egg pricing
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...