×

விவேகானந்தர்பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.28 கோடியில் இணைப்பு பாலம் எப்போது? சுற்றுலா பயணிகள் விரக்தி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்று இல்லாமல் அனைத்து நாட்களிலும் வெளிநாடு, உள்நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள்  அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் கடல் நடுவே உள்ள விவேகானந்தர்பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை  கண்டுகளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியை சுற்றி  பார்த்த திருப்தி இல்லாமல் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே எந்தவித தங்கு தடைகளும் இல்லாமல் திருவள்ளுவர் சிலையை  சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா  பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடுக்கடுக்காக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், விவேகானந்தர்பாறை-திருவள்ளுவர் சிலை இடையேயான இணைப்பு பாலத்துக்கு ரூ.15  கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி 95 மீட்டர் நீளம், கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரம், 8 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டன. தொடர்ந்து இணைப்பு பாலத்தை விரைவில் கட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இது  சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த  பணிகளும் நடக்கவில்லை. அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் கடல் வாரியம் சார்பில் மீண்டும் இணைப்பு பாலத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன்படி இந்த வாரியத்தின் துணை  தலைவர் சம்பத் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநில அரசின் செலவில் ரூ.28 கோடியில் இணைப்புபாலம் கட்டலாம் என்று  தமிழக அரசுக்கு திட்ட அறிக்கையை தயார் அனுப்பினர். இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு ரூ.28 கோடி நிதியை உடனே ஒதுக்கியது. இந்த நிதி ஒதுக்கப்பட்டு மாதங்கள் பல ஆகிவிட்டபோதிலும் அதன்பிறகு எந்தவிதமான நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை. ஆய்வு  பணிகள் என்ற பெயரில் அவ்வப்போது வரும் அரசு அதிகாரிகள் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தி விட்டு செல்கின்றனர். பல ஆண்டுகள் ஆகியும் விவேகானந்தர்  பாறை- திருவள்ளுவர் சிலை இடையேயான இணைப்பு பாலம் வந்தபாடு இல்லை. இது பொது மக்கள் மத்தியில் ஒரு கேலி செய்தியாகவே மாறிவிட்டது.

இந்த நிலையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நாகர்கோவிலில் சமீபத்தில் நடந்தது. அப்போது இணைப்பு பாலம் குறித்த கேள்வியை கலெக்டர்  எழுப்பி இருக்கிறார். தமிழக அரசு நிதி ஒதுக்கியும் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையேயான இணைப்பு பாலத்துக்கான வேலைகளை ஏன்  தொடங்கவில்லை என்று கேட்டு இருக்கிறார். இதையடுத்து இணைப்பு பாலத்துக்கான பணிகள் வேகமெடுத்து உள்ளன. அதன்படி பாலத்துக்கான நீளம், கடல் மட்டத்தில் இருந்து கட்டப்படும் உயரம்  ஆகியவற்றை அதிகபடுத்தலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர். இதன் முதல் கட்டமாக டிசைன் ஒர்க் பணிகள் நடந்து  வருகிறதாம். இந்த பணி முடிந்த பிறகு இணைப்பு பாலத்துக்கான வேலைகள் வேகமெடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அவ்வப்போது நடக்கும் ஆய்வு பணிகளோடு தற்போதைய டிசைன் ஒர்க் பணிகளும் முடிந்துவிடுமா? அல்லது உண்மையிலேயே இணைப்பு பால பணிகள்  வேகமெடுக்குமா? என்பதை அடுத்தடுத்த நாட்கள்தான் தீர்மானிக்க போகிறது என்கின்றனர் சுற்றுலா பயணிகள். எது எப்படியோ இணைப்பு பாலம் வந்தார் சரிதான்.  பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரிகளின் வேகத்தை.


Tags : bridge ,Vivekanandarpara - Tiruvalluvar ,Vivekanandarparu ,Thiruvalluvar , When is the bridge between Vivekanandarparu and Thiruvalluvar statue at Rs 28 crore? Tourists are frustrated
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!