×

நாளை மறுநாள் தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிகின்றனர்

திருச்செந்தூர்: நாளை மறுநாள் தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நாளை மறுநாள் (8ம்தேதி) தைப்பூசத்தை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், நாகர்கோவில், செங்கோட்டை, வள்ளியூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ரோடுகளில் பச்சை வேட்டி அணிந்த பக்தர்கள் சாரை சாரையாக செல்வதை காண முடிகிறது. சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 8ம்தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, 6.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 8.30 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து பூஜைகளும் நடக்கிறது. உச்சிகால பூஜைக்குப்பின் சுவாமி அலைவாயுகந்த பெருமாள் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வருகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி 4 ரதவீதி, உள்மாடவீதியை சுற்றி இரவு கோயிலை வந்தடைகிறார். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,pilgrims ,Thiruchendur , Pilgrims gather at Thiruchendur tomorrow
× RELATED இளையான்குடியில் திருச்செந்தூர் பக்தர்களுக்கு மாற்று மதத்தினர் வரவேற்பு