×

பழங்குடியின சிறுவனை தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்னதால் பரபரப்பு: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

நீலகிரி: பழங்குடியின சிறுவனை வனத்துறைஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் இன்று காலை துவங்கியது. முகாமை துவக்கி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாதுகாப்பு அதிகாரிகள், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளுடன், நடந்து சென்று கொண்டிருந்தார். கோயில் அருகில் வந்த அமைச்சர் ஓரமாக நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்களை, வாங்கடா இங்க என அழைத்தார்.

பயத்தில் சிறுவர்கள் தயங்க, அருகில் இருந்த வனத்துறையினர் அமைச்சர் அருகில் செல்லவைத்தனர். அங்கிருந்த அதிகாரிகள், அமைச்சர் சிறுவர்களிடம் கல்வி தொடர்பாக கேள்விகள் கேட்பார் எனத் தயங்கிய சிறுவர்களை அமைச்சரிடம் வரச் செய்தனர். ஆனால் சிறுவர்களிடம் அமைச்சர், செருப்பு பக்கிளை கழற்றிவிடு என கூறினார். அதில் பயந்துபோன ஒரு சிறுவன் கீழே அமர்ந்து காலணிகளைக் கழற்றினார். இதைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மிரண்டுபோயினர். உடனே சுதாரித்த குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு பத்திரிகையாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்தார். யாரும் போட்டோ எடுக்காதிங்க, என போலீசார் எச்சரித்தனர்.

சிறுவர்கள் செருப்பை கழற்றியப் பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் காலணிகளை எடுத்து ஓரமாக வைத்தார். இந்த இரண்டு சிறுவர்களும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர் பாகன்களாக உள்ளனர். பழங்குடி சிறுவர்களை அழைத்து காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தக் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானதை அடுத்து, இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி பரபரப்பைக் கிளப்பும் தமிழ்நாடு அமைச்சர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விளக்கம்

இந்த நிலையில், சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்தேன், அவன் எனக்கு பேரன் மாதிரி. சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை, என கூறியுள்ளார்.


Tags : Dindigul Srinivasan , Minister Dindigul Srinivasan, tribal boy, sandals,elephants camp
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...