×

12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை திரும்ப பெறக்கோரி சசிகலா மனு : வருமான வரித்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனக்கு எதிரான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக் கோரி, சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வருமான வரித்துறை பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீது கடந்த 1996ல் லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. அந்த கால கட்டத்தில் 1994-1995ம் நிதி ஆண்டில் சசிகலாவின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை லஞ்ச ஒழிப்பு துறை, வருமான வரித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் 1994-1995ம் நிதியாண்டுக்கான வருமான வரியாக 48 லட்சத்தை செலுத்துமாறு சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

 இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம்,  வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து  உத்தரவிட்டது.  
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் 2008ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி,  தொடர்பான வழக்குகளை  திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், சசிகலாவுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

 இதற்கு வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கை திரும்பப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. வருவாய் தணிக்கை பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள்,  நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள வழக்குகளை திரு ம்ப பெற முடியாது. இந்த மனு தொடர்பாக வருமான வரித்துறையில் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார்.  இதையடுத்து, வருமானவரி துறையின் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags : withdrawal ,Income Tax Department ,Sasikala , Sasikala petition, seeking withdrawal of case pending, 12 years,Income Tax department
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...