×

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் வேண்டாம்; நிலத்தடி நீரை குடிநீராக வழங்கக் கோரி இசிஆரில் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஏராளமான போலீசார் குவிப்பு

 

துரைப்பாக்கம், ஆக.3: உத்தண்டி பகுதியில் நிலத்தடி நீரை குடிநீராக வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது திருமண மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 197வது வார்டுக்கு உட்பட்ட உத்தண்டி பகுதியில் சுமார் 3,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நிலத்தடி நீர் தெருக்குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு சீரான நிலத்தடி நீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டதற்கு, இனி உங்கள் பகுதிக்கு நிலத்தடி நீர் விநியோகம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 24ம் தேதி உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனையடுத்து கானத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் ஈடுபட்ட பொதுமக்களும் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் நிலத்தடிநீர் நிறுத்தப்பட்டு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் வரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி 197வது வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கானத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் நிலத்தடி நீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து கானத்தூர் போலீசார், வருவாய் துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் கைது செய்த போலீசார் கானத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். இச்சம்பவத்தால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தடி நீர் தெருகுழாய் மூலம் மற்றும் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தக் குடிநீரை தான் நாங்கள் குடிப்பதற்கு மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வந்தோம்.

ஆனால் தற்போது எங்கள் பகுதிக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் பகுதிக்கு நிலத்தடி நீர் தான் வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திலிருந்து வழங்கப்படும் குடிநீர் தேவையில்லை. இதுகுறித்து நாங்கள் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து வரும் குடிநீர் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் ஏற்றதாக இல்லை. எங்களுக்கு நிலத்தடி நீர் தான் வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.

 

Tags : ECR ,Duraipakkam ,East Coast Road ,Utthandi ,Chennai Corporation ,15th Zone… ,
× RELATED சிறந்த நடிகைக்கான விருது வழங்குவதாக...