×

மகள் மீது ஆசிட் வீசிய விவகாரம்: ஓய்வு பெற்ற ஏட்டு கைது

சென்னை: திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் மகள் உட்பட 3 பெண்களின் மீது முகத்தில் அமிலம் வீசிய ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை  சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்களது மகன் சாய்குமார் (24). ஏசி மெக்கானிக். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பாலகுமார் மகள் தீபிகா (24) என்பவரை காதலித்து வந்தார்.இதையறிந்த பாலகுமார் தனது வீட்டை  காலி செய்து திருத்தணியில் குடியேறினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாய்குமாருடன் பெங்களூரு சென்று திருமணம் செய்துகொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக தீபிகா  உள்ளதால், சாய்குமார் வேப்பம்பட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இதையறிந்த தீபிகாவின் தந்தை பாலகுமார் கடந்த 3 நாட்களுக்கு முன் வேப்பம்பட்டு வந்தார்.

அங்கு தீபிகா வீட்டுக்கு சென்று தன்னோடு வீட்டுக்கு வந்து விடுமாறு அழைத்தார். இதற்கு தீபிகா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பாலகுமார் மற்றும் அடியாட்கள் 4 பேர் சேர்ந்து மயக்க மருந்துடன் ஆசிட் கலந்து தீபிகாவின் முகத்தில்  வீசியுள்ளார். அதைத் தடுக்க வந்த மாமியார் பாக்கியலட்சுமி, அவரது மற்றொரு மருமகள் திவ்யா முகத்திலும் ஆசிட் வீசிவிட்டு தப்பினர். இதில், முகம் கருகிய மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பாலகுமார் மற்றும் 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பாலகுமாரை  போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் பெற்ற மகள் உட்பட 3 பெண்களின் மீது முகத்தில் ஆசிட் வீசிய விவகாரத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ஒருவரே கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags : acid attack , Daughter, Acid, Arrested
× RELATED ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழா...