×

35 ஆயிரம் கோடிக்கு ஆயுத ஏற்றுமதி இலக்கு: ராணுவ கண்காட்சியில் பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 35 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,” என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் 11வது ராணுவ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிப்ரவரி 9ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 70 நாடுகளை சேர்ந்த 172 வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்த 856 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இதில், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாடானது ராணுவ தளவாடங்களுக்காக மொத்தமாக இறக்குமதியை நம்பி இருக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பாதுகாப்பு உரிமங்களின் எண்ணிக்கை 460.

 கடந்த 2014ம் ஆண்டு நான் பிரதமராக பொறுப்பேற்ற முதல் ஆண்டில் இந்த எண்ணிக்கை 210 ஆக இருந்தது. பீரங்கி துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிலேயே கட்டமைக்கப்படுகின்றன. இந்தியாவிற்காக, உலக நாடுகளுக்காக ‘மேக் இன் இந்தியா’ என்பதே நமது தாரக மந்திரமாக உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாதுகாப்பு தளவாடங்கள் ₹2000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 17 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ெதாழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பயங்கரவாதம் மற்றும் சைபர் அச்சுறுத்தல் உள்ளிட்டவை உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது. புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. இந்தியா மற்றவர்களுக்கு பின்னால் கிடையாது. பாதுகாப்பு துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அமைதிக்கு இந்திய நம்பகமான பங்களிப்பாளராக இருப்பதால், பாதுகாப்பு தளவாட தயாரிப்பானது எந்த நாட்டையும் இலக்காக கொண்டிருக்கவில்லை. இந்தியா மட்டுமல்ல அண்டை நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது நமது பொறுப்பாகும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

‘5 நாடுடன் பேச்சு’
ராணுவ கண்காட்சியில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு குடியரசு, இங்கிலாந்து, மாலத்தீவு, ஓமன், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அமைச்சர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேச்சுவார்த்தை  நடத்தினார். இதில், இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

Tags : Modi ,Army Exhibition Army Exhibition ,talks , Arms., Army Exhibition, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...