×

டிஎன்பிஎஸ்சி விவகாரம் பூதாகரமாகிறது விஏஓ தேர்விலும் முறைகேடு : புரோக்கராக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குரூப்2ஏ, 4 தேர்வுகளைத் தொடர்ந்து, விஏஓ தேர்விலும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் புரோக்கராக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இது தமிழக அரசுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், குரூப்4 மற்றும் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட எஸ்.ஐ.சித்தாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ஜெயக்குமார் என்ற புரோக்கர்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தது தெரியவந்தது. அவரிடம்தான் சித்தாண்டி உள்ளிட்ட பல புரோக்கர்கள் பணத்தைக் கொடுத்துள்ளனர். அவர் அதிகாரிகள் மூலமாக மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த மோசடிகளுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டது புரோக்கர் ஜெயக்குமார் என்று தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கும் போலீசார் விரைந்துள்ளனர். இந்தநிலையில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், 2016ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 813 பதவிகளுக்கு 7 லட்சத்து 70 ஆயிரத்து 860 பேர் தேர்வு எழுதினர். அதே ஆண்டு பிப்ரவரியில் எழுத்து தேர்வு நடந்தது. ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஓஏ நாராயணன் என்பவர் புரோக்கராக செயல்பட்டு 10 பேரிடம் தலா 12 லட்சம் வீதம் 1கோடியே 20 லட்சம் வசூலித்து, டிஎன்பிஎஸ்சியில் முக்கிய புரோக்கராக இருந்த ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். அதோடு தனக்காகவும் 12 லட்சம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த 10 பேரும் தேர்வில் வெற்றி வெற்றனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விழுப்புரம் தாலுகாவில் விஏஓவாக உள்ள நாராயணனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணையில் பணம் வாங்கி, ஜெயக்குமாரிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தன்னைப்போல மேலும் பல புரோக்கர்கள் விஏஓ தேர்வுக்காக ஜெயக்குமாரை அனுகினர். எனக்கும் நண்பர்கள் மூலமாகத்தான் ஜெயக்குமாரை தெரிந்தது. பணம் கொடுத்ததால் எனக்கும் சேர்ந்து 11 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போது, எத்தனை கேள்விகளுக்கு விடை அளித்துள்ளோம். எத்தனை கேள்விகளை எழுதாமல் விட்டு விட்டு வந்துள்ளோம் என்பதை விடைத்தாளின் மேலே குறிப்பிட வேண்டும். ஆனால் 2016ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில், அப்படி குறிப்பிடவில்லை. இதனால் நாங்கள் எங்களுக்கு தெரிந்த அல்லது குத்துமதிப்பாக 10 முதல் 30 கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கொடுத்து விட்டு வந்து விட்டோம். விடைகள் எழுதாத கேள்விகளுக்கு ஜெயக்குமாரின் ஆட்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வைத்து விடைகளை எழுதி விடுவார்கள். அப்படித்தான் எங்களை வெற்றி பெற வைத்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் எப்படி? யாரை வைத்து அப்படி செய்தார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. அதிகாரிகள் உடந்தையா என்பது குறித்தும் ஜெயக்குமாருக்கு மட்டுமே தெரியும் என்று போலீசில் கூறியுள்ளார். இதனால் நாராயணனிடம் பணம் கொடுத்த 10 பேர் குறித்தும் அவர்கள் தற்போது எங்கு விஏஓவாக பணியாற்றுகிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் தோண்ட தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக, ஒவ்வொரு மோசடியாக வெளியாகி வருகிறது. இந்த மோசடி தற்போது புதிதாக வெளியாகியுள்ளதால், இது குறித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு சிபிசிஐடி அதிகாரிகள் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : broker ,TNPSC ,VAO , TNPSC issue , case of abuse, VAO exam
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு