×

தமிழ் முறைப்படி கோலாகலமாக நடந்தது தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு : லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்

தஞ்சை: தமிழர்களின் ஆயிரம் ஆண்டு பாரம்பரியமான தஞ்சை பெரிய கோயிலில், தமிழில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. ‘‘சிவ சிவ பெருவுடையாரே’’ என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கி.பி.1010-ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு செய்தார். அதன்பிறகு நாயக்கர், மராட்டிய மன்னர்களும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்தனர். கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய குடமுழுக்கு பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இதன்பின், இந்திய தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து திருப்பணிகளை ஓராண்டுக்கு முன் தொடங்கினர். கடந்த டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் நடந்தது. இதைதொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்கான பூஜைகள் கடந்த 27ம் தேதி தொடங்கியது. யாகசாலை பூஜைக்காக கோயில் வளாகத்துக்கு வெளியே 11,900 சதுரஅடி பரப்பில் 110 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது.

வெண்ணாற்றங்கரையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, யாகசாலையில் பயன்படுத்தப்பட்டது. 1ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. குருமூர்த்தி சிவாச்சாரியார், சுந்தர மூர்த்தி சிவாச்சாரியார், தர்பாரண்ய சிவாச்சாரியார், ஞானமணி சிவாச்சாரியார் தலைமையில் 400 சிவாச்சாரியார்களும், 80 தமிழ் ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தினர். நேற்று முன்தினம் 7-வது கால பூஜை முடிந்தது. இந்தநிலையில், நேற்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை 8ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இந்த யாகசாலை பூஜைகளில் 1,000 கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரிக்காய், கர்சூரிக்காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாருகட்டை போன்ற 124 மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் 7.30 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. ராஜகோபுரம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோபுரம், விநாயகர், முருகன், வராகி அம்மன், கேரளாந்தகன், ராஜராஜ சோழன் கோபுரங்களுக்கும், கொடிமரம், நந்திமண்டபம் உள்ளிட்ட மண்டபங்களுக்கும் புனிதநீரை சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் மேள தாளங்கள் முழங்க மலர்கள் தூவப்பட எடுத்துச்சென்றனர். 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரத்தின் மீது சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 13 பேர் காலை 8.10 மணிக்கு ஏறிச்சென்றனர். 9.20 மணியளவில் விமான கோபுரத்திலிருந்து பச்சைக்கொடி அசைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிவ வாத்தியக்கருவிகள் இசைக்க விமான கோபுரம் உள்பட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தினர். பின்னர் மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை ஏற்றப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், ‘‘சிவ சிவ பெருவுடையாரே’’ என்று விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் தலையில் தண்ணீர் தெளிப்பதற்காக பல இடங்களில் ஸ்பிரிங் ரோலர் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தது. கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டபோது, இந்த கருவிகள் நாலாபுறமும் சுற்றி பக்தர்கள் தலையில் தண்ணீர் தெளித்தது. பெரியகோயிலில் கடந்த பல நூறு ஆண்டுகளாக சமஸ்கிருத முறைப்படிதான் குடமுழுக்கு நடந்துள்ளது. ஆனால் இந்த முறை தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, சமஸ்கிருத முறைப்படியும், தமிழ் முறைப்படியும் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்தது. அதன்படி, சிவாச்சாரியார்கள் சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் தமிழ் பதிகங்களை பாடிய பின்பு கலசங்கள் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் குடமுழுக்கு விழா நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விழாவில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் இல.கணேசன், கலெக்டர் கோவிந்தராவ், பரம்பரை அறங்காலர் ராஜாபோன்ஸ்லே மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்துக்குள் மட்டும் சுமார் 20,000 பக்தர்கள் குழுமி இருந்தனர்.
கோயிலுக்கு வெளியே மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். விழா முடிந்ததும் மூலஸ்தானம் திறக்கப்பட்டது. கூட்டம் அதிகளவில் இருந்ததால் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி 200, 200 பேராக அனுமதித்தனர். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் சரக டி.ஐ.ஜிக்கள் லோகநாதன், பவானீஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

5 நாளில் 13 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பெரிய கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதற்காக கடந்த 1 ந்தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி 8 கால பூஜைகள் முடிந்து நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. இவ்விழாவிற்காக அதிகாலை 3 மணி முதல் இரவு வரை வெளிநாடு, வெளி மாவட்டம், உள்ளூரிலிருந்து வந்து பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். பெரியகோயிலின் வடபுறம் வழியாக விஐபிக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோயிலின் வடபுறத்தில் விவிஐபி, விஐபி கூட வந்தவர்கள், கார் ஓட்டுநர் என பலரும் அடையாள அட்டை இன்றி உள்ளே நுழைந்தனர்.

பக்தர்கள் ஏமாற்றம்

கோயில் கலசங்களில் ஊற்றப்படும் புனித நீர் கோயிலை சுற்றி வெளியில் காத்திருந்த பக்தர்களுக்கு தெளிக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கோயிலின் உள்ளே இருந்த விஜபிக்கள், விவிஐபிக்கள் ஆகியோருக்கு மட்டுமே ஸ்பிரேயர் இயந்திரம் கொண்டு தெளிக்கப்பட்டது.  இதனால் கோயிலின் வெளியே காத்திருந்த பக்தர்கள் புனித நீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

கோபுரம் ஏறிய தமிழ்


ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோயிலை கட்டி எழுப்பியதும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் இப்போதுதான் முதன்முதலாக தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தமிழ் கோபுரம் ஏறுகிறதா என்பதை  தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர் பெருமக்கள் கோயிலுக்குள் வந்து கண்காணித்தனர். விமான கோபுரத்திற்கு சிவாச்சாரியார்களுடன் 2 ஓதுவார்களும் சென்றனர். இதேபோல் அனைத்து சன்னிதான கோபுரங்களிலும் தமிழ் ஓதுவார்கள் சென்றனர். ஓதுவார்கள் தமிழில் மந்திரங்கள் ஓதுவதை தமிழ் அறிஞர் பெருமக்கள் கண்காணித்தனர்.

Tags : devotees ,Tanjay ,Tamil Nadu ,kudumbamukku ,Tanjore , According to the Tamil tradition, kudumbamukku temple of Tanjore
× RELATED சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு...