×

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் சார்ந்த 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி கிரிவலம் செல்வதற்கு, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி 2024 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறைகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வருடமும் பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்கிளிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்தனர். சித்ரா பௌர்ணமி நாளில் வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் (சுமார் 2500 பேருந்துகள் நிறுத்தவும்) மற்றும் நகராட்சி மூலம் 22 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 33 இடங்களிலும் ஆக மொத்தம் 55 இடங்களில் கார்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

அனைத்து தற்காலிக பேருத்து/கார் நிறுத்தங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின் விளக்குகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் 5346 நடைகள் இயக்கப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப்பாதை குறைந்த கட்டணம் ரூ 10 இல் தனியார் பேருந்து 20 மற்றும் 81 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டது. சித்ரா பௌர்ணமி விழாவிற்காக 18 வழக்கமான நடைகள், 6 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டது.

கிரிவலத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் (இதய மருத்துவருடன்), 85 நிலையான மருத்துவ குழுக்களும், 20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலர்களும், 15 தீயணைப்பு வாகனங்களும், 184 தீயணைப்பு வீரர்களும், வனப்பகுதியை கண்காணிப்பதற்காக 7 இடங்களில் 50 வனத்துறை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருக்கோயில் வளாகத்திற்குள் 360 கண்காணிப்பு கேமிராக்களும், கிரிவலப்பாதையை சுற்றிலும் 97 கண்காணிப்பு கேமிராக்களும், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் வாயிலாக பாதுகாப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப்பாதைகளில் குடிநீர் வசதிகளும், தானியங்கி மின் மோட்டார் மூலம் நீர் நிரப்பி கொள்ளும் வசதியும், 106 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகளும் 425 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதிகளும், நகராட்சி மூலம் 600 தூய்மைப்பணியாளர்களும், ஊரக வளர்ச்சி துறை மூலம் 1200 பணியாளர்கள் மூலம் தூய்மைப்பணிகள் கிரிவலப்பாதையில் போதிய அளவில் குப்பைத் தொட்டிகளும் உயர் மின கோபுர விளக்குகளும், தெரு விளக்குகளும், 8 ஜெனரேட்டர்களும் பக்தர்களின் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், முதல் முறையாக அருள்மிகு அருணாச்சலலேசுவரர் திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் நிழல் பந்தல், பூத நாராயணன் பெருமாள் கோயில் அருகிலிருந்து நிழல் மேடை அமைக்கப்பட்டு நீரினால் நனைக்கப்பட்ட தேங்காய் நார் மேட் அமைத்தும், விரைவாக தரிசனம் செய்ய மூன்று வழிகளில், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைகுழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு விரைவாக சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்படுத்தப்பட்டு, விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக 60 ஆயிரம் லிட்டர் நீர் மோர், 60 ஆயிரம் கடலை உருண்டை, 80 ஆயிரம் வாழைப்பழம், ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பிஸ்கட், தர்ப்பூசணிப்பழம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு மற்றும் இரண்டரை இலட்சம் தண்ணீர் பாட்டில்கள் என நேற்று மட்டும் ஒரு இலட்சத்திற்கும் இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நிலையான மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில் கொட்டகை, இருக்கைகள்,குடிநீர் போன்று வசதிகள் செய்ததும், வழிகாட்டி பலகைகள் அமைத்தும், காவல் துறை தெரிவிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், கிரிவலப்பாதையில் தூய்மை பணி மற்றும் கழிப்பிடங்களுக்கு தேவையான பொருட்களை போதுமான அளவிற்கு முன்னதாகவே இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் மாடவீதி மற்றும் கிரிவலப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கட்டுபாட்டு அறைகள் ஏற்படுத்தியும், தற்காலிக பேருந்து நிலையங்கள், திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் கண்காணிப்பு பணியாளர்களை நியமனம் செய்தும், இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டும் (மண்டபங்கள் 82,பொது இடங்கள் 23) அன்னதானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 12 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 22 அலுவலர்களை மூலம் கண்காணிக்கப்பட்டது.

மேலும் 160 பிரத்யோக உடையுடன் தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கம் இடங்களில் பங்கேற்றனர். திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் போதிய மின்வாரிய பணியாளர்களை பணி ஒதுக்கீடு செய்து பணியில் அமர்த்தப்பட்டனர்.நெடுஞ்சாலை துறையின் மூலம் 8 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களின் கல், மண் குத்தாமல் இருப்பதற்கு தூய்மைப்படுத்தும் இயந்திரத்தின் மூலம் கிரிவலப்பாதையை கல், மண் ஆகியவற்றை அகற்றப்பட்டது. அதனால் பக்தர்கள் சிரமின்றி கிரிவலம் செல்ல ஏதுவாக அமைந்தது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு கிரிவலம் சிறப்பாக அமைவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்ட செயல்பாடுகள்:

* 24 மணி நேரமும் கிரிவலப்பாதையை 1800 பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

* கோயில் தரிசனத்திற்கு மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற தாய்மார்கள், கைக்குழந்தைகள் வைத்திருந்த தாய்மார்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கும் தரிசனம் செய்ய சிறப்பு வழிகள் ஏற்படுத்தப்பட்டது.

* நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் வெப்பத்தை தணிக்கும் வகையில் சாலைகளில் டேங்கர் மூலம் தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது.

* 24 மணி நேரமும் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் தலைமையிலான குழு 5000 காவலர்களை கொண்டு சிறப்பாக கண்காணிக்கப்பட்டது.

* நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நிரந்தர சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணிநேரமும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து வழங்கப்பட்டது.

The post சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Chitra Pelarnami ,Tamil Nadu ,Krivalam ,Chitra Poornami ,Thiruvannamalai Arulmiku Arunachaleswarar Temple ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!