×

மார்த்தாண்டம் அருகே சாலையில் இடையூறாக ஜல்லி, பாறைப்பொடி: பொதுமக்கள் உயிருடன் விளையாடும் நெடுஞ்சாலைத்துறை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குறுக்காக நேசமணி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் ஆற்றின் நீர்மட்டத்தில் இருந்து  கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் உள்ளது. மார்த்தாண்டம் - ஞாறாம்விளை - மேல்புறம் சாலையில் இந்த பாலம் போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம்  வாய்ந்ததாக உள்ளது. இந்த பாலம் பொது மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 1978ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னையன்  தலைமையில், மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பா.ராமச்சந்திரன் பாலத்தை திறந்து வைத்தார். கடந்த 40 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை ஆற்றிவரும்  இந்த பாலம் தற்போது பராமரிப்பு இன்றி தன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது.

இந்த பாலத்தின் இரு பகுதிகளும் ெபரும்பள்ளமாக உள்ளன. இப்பகுதியில் பக்கச்சுவர் கட்டி சாலையில் பள்ளமான பகுதியை சரிசெய்ய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பாலத்தையொட்டி சாலையோரம் ஜல்லி மற்றும் பாறைப்பொடி கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும்  மேலாக இவை இங்கு கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணிகளை தொடங்கவில்லை.  குறுகலான இந்த சாலையின் ஒருபுறம் இவற்றை கொட்டி வைத்துள்ளதால் பல விபத்துக்கள்  ஏற்பட்டுள்ளன.

இதில் சிலர் அவசர சிகிச்சை பிரிவிலும் உள்ளனர்.  ஆனால் ெநடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கண்மூடி உள்ளது. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைப்பணியை  தொடங்க கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஜல்லி மற்றும் பாறைப்பொடியை வேறிடத்தில் கொட்டி வைத்திருக்கலாம். ஆனால் சாலையில் இடையூறாக கொட்டி வைத்து பணியும் தொடங்காமல் பொதுமக்கள் உயிருடன் விளையாடுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி  உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக பணியை தொடங்கிட வேண்டும். அல்லது இடையூறாக காணப்படும் ஜல்லி மற்றும் பாறைப்பொடியை  அங்கிருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Paraliyapodi ,The Highway Department of Public Life Jalli ,highway , Jalli, rock powder: The highway is where the public lives
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...