×

டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்பு மனு தள்ளுபடி

சென்னை:  டப்பிங் யூனியன் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பாடகி சின்மயினுடைய மனு நிராகரிக்கப்பட்டாக  நீதிபதி ரவி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.  திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக,  திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வருடம் 2018ல் அவர் நீக்கப்பட்டார்.  இதை எதிர்த்து சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த 2006ம் ஆண்டில் இருந்து சங்கத்திற்கான நுழைவுக் கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை சின்மயி செலுத்தியுள்ளார். மேலும், 2018ம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என ஆதாரங்களுடன் சின்மயி வாதிட்டார். இதையடுத்து, பாடகி சின்மயியை, டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 

இந்நிலையில், 2020, 2022ம் ஆண்டுக்கான டப்பிங் யூனியன் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தல் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 29,30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 23 பதவி இடங்கள் உள்ளன. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் பாடகி சின்மயி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சின்மயி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார். இதனால், பாடகி சின்மயி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags : Chinmayi ,union election , Dubbing, union, election, singer chinmayi, filing, nomination, dismissal
× RELATED மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ...