×

போர்ச்சுகல் மண்ணின் ‘போர் வீரன்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள் இன்று

சர்வதேச கால்பந்து அரங்கின் ‘தளபதி’ என்று இளைய தலைமுறை ஒருவரின் பெயரை உச்சரிக்கிறது. இவரை தங்கள் அணியில் எடுக்க கிளப் அணிகள் பல நூறு கோடிகளை கொட்டி குவித்து காத்திருக்கின்றன. தங்கள் அணியின் ரேங்கிங்கை உயர்த்துவார். அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று தருவார் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும், இந்த ஒரு வீரனை நம்பியிருக்கிறது. அவர்தான்.. கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா? போர்ச்சுகல் நாட்டின் பஞ்சால் மாகாணத்தில், மதீரா நகரில் 1985ம் ஆண்டு, பிப்.5ம் தேதி பிறந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவருக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் பிறந்தது. ஆனால், தனது 15 வயதிலேயே சீரற்ற இதயத்துடிப்பால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், தொடர் சிகிச்சை, தன்னம்பிக்கை மூலம் அதை மாற்றிக் காட்டியதோடு, இன்று பல கோடி இளைஞர்களின் இதயத்துடிப்பாக விளங்குகிறார் ரொனால்டோ.

இளம் வயதில் அன்டோரின்கா கிளப் அணிக்காக விளையாடி வந்தார். பின்னர் 1997ல் நிசியோனல் என்ற கிளப்பிற்கு மாறினார். 18 வயதில் இவருக்கு உலகளாவிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது மான்செஸ்டர் யுனைடெட். இந்த அணிக்காக கோடிக்கணக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுதான் இவரது கால்பந்து வாழ்க்கையில் நடந்த முக்கிய திருப்புமுனை. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்காக சிறிது காலம் விளையாடினார். தற்போது ஜூவென்டாஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2006 உலகக்கோப்பை போட்டியின்போது தன்னோடு மான்செஸ்டர் யுனைடட் அணியில் விளையாடும் வெய்ன் ரூனியின் மீது குற்றம் சுமத்தி அவர் சிவப்பு அட்டை பெற காரணமாக இருந்தார். இதனால் கிளப் அணியில் இவரை பலரும் தகாத வார்த்தைகளால் பேசத்தொடங்கினார். இதனால் வெறுப்படைந்த ரொனால்டோ, அணி மாறி சிறந்த வீரராக ஜொலிக்கத் தொடங்கினார்.

இடது பக்க விங்கரான இவர் தனது நேர்த்தியான ஆட்டத்தால் பல கிளப் அணிகள் சாம்பியன் பட்டம் பெற காரணமாக இருந்தாலும், போர்ச்சுகல் அணிக்காக கோப்பை வாங்கித் தரவில்லையே என்றும் அவரை விமர்சித்தனர். 2016 யூரோ கோப்பை தொடரில் ஹங்கேரிக்கு எதிரான லீக் கடைசிப் போட்டியில் தோல்வியை நோக்கி போர்ச்சுகல் சென்றுகொண்டிருக்க, அடுத்தடுத்த 2 கோல்கள் அடித்து அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ரொனால்டோ. அரையிறுதியிலும் ஆதிக்கம் செலுத்தினார். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் - போர்ச்சுகல் அணிகள் மோதின. இதில் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு பாதியில் வெளியேறினார். இருப்பினும் மீண்டும் களம் கண்டு சக வீரர்களை உற்சாகப்படுத்தினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்று கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையை போர்ச்சுகல் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றபோது, ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். 3 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 4 ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதுகள் என எண்ணற்ற விருதுகள் வாங்கிக் குவித்து மகத்தான வீரராக, களத்தில் போராடும் போர் வீரனாக தற்போது வரை திகழ்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சொந்த ஊரில் புற்றுநோய் மருத்துவமனை, குழந்தைகளின் கல்விக்கு உதவி என இவரது உதவும் கரங்கள் உலகுக்காக கொடுத்து உதவி வருகின்றன. இன்று 35 வயதை தொடும் ரொனால்டோ போல, நீங்களும் தன்னம்பிக்கையுடன் போராடினால், முயன்றால் வெற்றி கோல் உங்கள் பக்கம்தான் இளைஞர்களே...!

Tags : birthday ,Cristiano Ronaldo ,Portugal ,Fighter , Portugal, war veteran, Cristiano Ronaldo, birthday
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி