×

சோழர்களின் கனவு நகரமான கங்கை கொண்ட சோழபுரத்தை மீட்டெடுத்த தமிழக கட்டிடக்கலை மாணவி ரம்யா

சென்னை:  தஞ்சை பெரியகோவில் குடமுழக்கு,  சோழர்களை பிரதான பேசுபொருளாக மாற்றியுள்ள நிலையில், சோழர்களின் கனவு நகரமான கங்கை கொண்ட சோழபுரத்தை தமிழக கட்டிடக்கலை மாணவி ரம்யா மீட்டெடுத்துள்ளார். தமிழக வரலாற்றில், சோழர்களுக்கு என்றுமே தனிப்பெருமை உள்ளது. அதிலும் இடைக்கால சோழர்களான ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் பல நாடுகளில் வெற்றி கொடியை நாட்டிய சிறந்த மாமன்னர்கள் ஆவர். சோழர்களின் கனவு நகரமாக கட்டி எழுப்பப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தை தனது கட்டிடக்கலை மூலம் வரலாற்றிலிருந்து மீட்டெடுத்து, காட்சி படுத்திருக்கிறார் தமிழக கட்டிடக்கலை மாணவி ரம்யா. சென்னையை பூர்விகமாக கொண்ட ரம்யா தற்போது, அமெரிக்காவில்  பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் இளங்கலை பயின்று வருகிறார். சிறு வயது முதல் தமிழ் பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மீதும்  ஈர்ப்பு கொண்ட இவர், தான் தேர்ந்தெடுத்துள்ள கட்டிடக்கலை மூலம் அதன் சிறப்புகளை வெளிப்படுத்தி வருகிறார். ராஜேந்திர சோழனின் காலம் தொட்டு, 250 வருடங்களாக சோழர்களின் தலைமை இடமாக திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரம், பாண்டியர்களின் படையெடுப்பாலும், கால மாற்றத்தாலும் அழிந்து விட்டதாக வரலாற்று ஆய்வுகளிலிருந்து எடுத்து கூறியுள்ளார்.

மேலும், இவ்வாறு அழிந்து போன கங்கை கொண்ட சோழபுரத்தை, கால சக்கரத்தை கொண்டு பின்னோக்கி சென்று பார்த்தால் எப்படி இருக்கும்? என்பதை தனது கட்டிடக்கலை மூலமாக தற்போது சாத்தியமாக்கியுள்ளார் ரம்யா. தற்போது உருவாக்கியதில் கட்டிடக்கலைகள், உள் கட்டமைப்பு,  நீர் மேலாண்மை என அனைத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல துறைகளில், சிறந்த நகரமாக கட்டி எழுப்பப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்போடும்,  இந்து மதத்தின் தாக்கத்தோடும் மேன்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மாயாமத வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படியே, கங்கை கொண்ட சோழபுரம் உருவாக்கப்பட்டதாக ரம்யா தெரிவிக்கிறார். மேலும், வரலாற்று தரவுகளில் இருந்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்தை மீட்டுள்ள  ரம்யாவின் படைப்பு உலக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, பல சர்வதேச கட்டிடக்கலை கண்காட்சிகளில் ரம்யாவின் கங்கை கொண்ட சோழபுரப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு  வருகின்றனர்.

Tags : Ramya ,Tamil ,Cholapuram ,dream city ,town ,Cholas ,Gangai , Cholas, Gangai Cholapuram, Tamil Nadu Architecture, Student, Ramya
× RELATED சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து...