×

புதுக்கோட்டை பகுதியில் விற்பனை செய்ய முயன்ற 20 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் மீட்பு

சென்னை:புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில், பஞ்சலோக விநாயகர் சிலையை சிலர் 6 கோடிக்கு விற்க முயற்சிப்பதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு தலைமையில்,  போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜாராம், இன்ஸ்பெக்டர் தென்னரசு  ஆகியோர் தலைமையிலான  தனிப்படை போலீசார்  புதுக்கோட்டை கீரனூர் கிராமம்  கொளத்தூர்  பகுதிக்கு மாறுவேடத்தில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். அங்கு, விநாயகர் சிலையை விற்க முயன்ற  வெள்ளைச்சாமி (29), தொடையூரை சேர்ந்த மதியழகன் (37) ஆகியோரை சந்தித்து, விநாயகர் சிலையை 6 கோடியிலிருந்து 3.5 கோடிக்கு பேரம் பேசி முடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் விநாயகர்  சிலை ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (24), லால்குடியை சேர்ந்த குமார் (29) ஆகியோரிடம் இருப்பதாக கூறி அங்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு விநாயகர் சிலையுடன்  சோமாஸ்கந்தர் சிவன், பார்வதி மற்றும் சிவகாமி அம்மன்,  மாணிக்கவாசகர் ஆகியோரின்  பஞ்சலோக சிலைகளும் இருந்தன. இதனையடுத்து அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார், 5   பஞ்சலோக சிலைகளையும்  பறிமுதல் செய்து சென்னை கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு  கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் பஞ்சலோக விநாயகர் சிலையை வெள்ளைச்சாமி (29), தொடையூரை சேர்ந்த மதியழகன் (37), ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (24), லால்குடியை சேர்ந்த குமார் (29) ஆகியோர் சேர்ந்து விற்க  முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் விநாயகர் சிலையை மீட்க சென்றபோது அங்கு மேலும் 4 சிலைகள் இருந்தன. இதில் சோமாஸ்கந்தர் சிவன் சிலை 51 கிலோ, பார்வதி அம்மன் சிலை 21 கிலோ, சிவகாமி அம்பாள் சிலை 46 கிலோ, விநாயகர் சிலை 28 கிலோ, மாணிக்கவாசகர் சிலை 26 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த பஞ்சலோக சிலைகளின் மதிப்பு ₹20 கோடி.  இந்த சிலைகள் சோழர் காலத்து  பழமையான சிலைகள். இது எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது. கைதான 4 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஐஜி அன்பு, கூடுதல்  ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Pudukkottai , Restoration of statues worth, Rs 20 crores,Pudukkottai
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை