×

குன்றத்தூர் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண்: போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு

சென்னை: குன்றத்தூர் ரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி பாண்டியம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் குடிபெயர்ந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன், இவரது வீட்டிற்கு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் முருகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே முருகன் வசித்து வந்த செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் முகாமிட்டு, முருகனை யார் கொலை செய்தது, கொலைக்கான காரணம் என்ன, இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்தனரா அல்லது குடும்ப பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.  
மேலும், கொலையாளிகளை பிடிக்க உதவி கமி‌ஷனர் செம்பேடுபாபு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர்.

இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்த, குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.மணிகண்டன் (25), கருணாகரன் (23), தினேஷ்குமார் (26), எஸ்.மணிகண்டன் (28), ஸ்ரீராம் (29) ஆகிய 5 பேரும் நேற்று விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் ைவக்க மாஜிஸ்திரேட் அருண் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவர்கள் 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேடம்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க குன்றத்தூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tags : court ,Villupuram ,persons ,murder , Kundathoor Rowdy Murder, Villupuram, Court, Police
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...