×

5-வது முறையாக U19WorldCup-பை முத்தமிடுமா?: பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

பாட்செப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கிய இந்த தொடர்  பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் அணிகளை வீழ்த்தி  6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சூப்பர் லீக் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 74 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால் இறுதியில் பாகிஸ்தான் யு-19 அணி 6  விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளுமே ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரை இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பரபரப்பான அரை இறுதியில் இந்தியா யு-19 - பாகிஸ்தான் யு-19 அணிகள் இன்று மோதின. டாசில் வென்ற பாகிஸ்தான் யு-19 அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து, பாகிஸ்தான் அணி சார்பில் ஹைதர் அலி,  முகமது ஹுரைரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தொடக்கத்திலே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியது. ஹுரைரா 4, ஃபகத் முனிர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஹைதர் அலியுடன், ரோஹைல்  நஸிர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

ஹைதர் அலி 56 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நஸிர் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது ஹரிஸ் மட்டும்  21 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 43.1 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரொஹைல் நசீர் 62, ஹைதர் அலி 56 ரன்களும்  சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா 3, கார்த்திக் தியாகி 2, ரவி பிஷ்னோவ் 2 விக்கெட்டை எடுத்தனர்.

தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா யு-19 அணியில், தொடக்க வீரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா களமிறங்கினர். தொடர்ந்து இரு வீரர்களும் அதிரடியாக விளையாடி 35.2 ஓவரில்  ஆட்டத்தை முடித்து பாகிஸ்தான் அணியை பிரமிக்க வைத்தனர். ஜெய்ஷ்வால் 113 பந்துகளில் நான்கு 6s, எட்டு 4s என 105 ரன்கள் குவித்தார். திவ்யான்ஷ் சக்சேனா 99 பந்துகளில் ஆறு 4s என 59 ரன்கள் குவித்தார். முடிவில் இந்திய அணி  யு19 35.2 ஓவரிலேயே விக்கெட் எதுவும் இல்லாமல் வெற்றி கனியை பறித்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் யு-19 அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்கு  முன்னேறியுள்ளது.

இந்தியா யு-19 அணி 2000 (கேப்டன்: முகமது கைப்), 2008 (கேப்டன்: விராத் கோஹ்லி), 2012 (கேப்டன்: உன்முக்த் சந்த்) மற்றும் 2018ல் (கேப்டன்: பிரித்வி ஷா) இளைஞர் உலக கோப்பையை வென்றுள்ளது. நான்கு முறை யு-19 உலக கோப்பையை முத்தமிட்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : India ,final ,Pakistan ,Kiss U19WorldCup , Kiss U19WorldCup 5th time: India beat Pakistan by 10 wickets
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...