×

ஸ்மாட் சிட்டி திட்டம் பற்றி சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம்

சேலம்:  மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 100 பெருநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீர்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் இரண்டாம் கட்டமாக, சேலம் மாநகரம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 945 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், அவசர கால உதவிகள், பெண்களின் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான கல்வித் தரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை தொடங்கி இந்த கருத்துக்கணிப்பு வரும் பிப்ரவரி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி ஜெயராம் கல்லூரியில் மாணவிகளுக்கு கருத்துக்கணிப்பு தொடர்பான இணையதளம் குறித்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக, அவர் கூறியதாவது,  சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தன்னார்வு அமைப்புகள் முன்வந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை நடைபெறும் கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொள்ள வேண்டுமென்றார். குறிப்பாக மாணவ, மாணவியா் தங்களது நண்பா்கள், உறவினா்கள் மற்றும் பெற்றோர்களிடம் இது தொடா்பான விவரங்களைத் தெரிவித்து அவா்களையும் இக்கருத்து கணக்கெடுப்பில் கலந்து கொள்ள தெரிவிக்க வேண்டும் என்றார். பின்னர், இவற்றில், எனது நகரம், எனது பெருமை என்ற தலைப்பின் கீழ் இணையதளத்தில் பொதுமக்களும், மாணவர்களும் மாநகராட்சிக்கு என்னனென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கருத்துக்களை பதிவிடலாம் என்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளா் அ. அசோகன், கல்லூரியின் தாளாளா் ஜெ. ராஜேந்திர பிரசாந்த், கல்லூரியின் முதல்வா் எ.ஆறுமுகம், மாநகா் நல அலுவலா் மருத்துவா் கே. பார்த்திபன், உதவி ஆணையா் ஆா். கவிதா, உதவி செயற்பொறியாளா் ஆா். செந்தில்குமார், நிர்வாக அலுவலா் வி. மருதபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Tags : Satish ,Salem Corporation ,college students , Smad City, Plan, Salem, Corporation, Commissioner, College, Students, Description
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது