×

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? தமிழக சட்டப்பேரவை செயலர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக சட்டப்பேரவை செயலர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக கொடுத்த புகார் மனு மீது எடுத்த நடவடிக்கைகள் பற்றி பதில் தர உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

எடப்பாடி அரசுக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அது குறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்ச நீதீமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போது காரசார வாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டு வருகிறார்.


கபில் சிபல் வாதம்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சபாநாயகர் வழக்கில் எந்த முடிவும் எடுக்காமல் 3 ஆண்டுகளாக இருக்க முடியாது என்று வாதிட்டார்.

முகுல் ரோத்தகி வாதம்

எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை ஓ.பி.எஸ். மீறினார் என்பதே எதிர் தரப்பின் குற்றச்சாட்டு என்று தெரிவித்த முகுல் ரோத்தகி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற அடிப்படையில் சக்கரபாணி மனுவை ஏற்க முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தார்.

தலைமை நீதிபதி கேள்வி

திமுக கொறடா புகார் மீது என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கேள்வி எழுப்பினார். ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி கால தாமதம் செய்தது ஏற்புடைதா? என்றும் இந்த விவகாரத்தில் 3 ஆண்டு தாமதம் என்பது தேவையற்றது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Speaker ,Secretary General ,Supreme Court ,Tamil Nadu ,Chief Justice ,O. Pannirselvam , 11 MLAs disqualify, Supreme Court, Inquiry, Chief Justice, O. Pannirselvam
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...