×

முதுகுளத்தூர் சாயல்குடி பகுதியில்: மிளகாய், மல்லி விளைச்சல் இருந்தும் உலர்களம் இன்றி விவசாயிகள் அவதி

சாயல்குடி: முதுகுளத்தூர், கடலாடி தாலுகாவில் மிளகாய், மல்லி நன்றாக வளர்ந்துள்ளதால், அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், அதற்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி, பருத்தி, நிலக்கடலை, கம்பு, குதிரைவாலி, சோளம் போன்ற  தானிய வகை பயிரிடப்படுகிறது. குறிப்பாக கடலாடி தாலுகாவில் இதம்பாடல், கடுகுசந்தை, மேலச்செல்வனூர், எஸ்.தரைக்குடி, டி.எம்.கோட்டை, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, ஏனாதி, சித்திரங்குடி, மேலச்சிறுபோது, சவேரியார்பட்டணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், முதுகுளத்தூர் தாலுகாவில் கிடாத்திருக்கை, கீழத்தூவல், மகிண்டி, மீசல், பொசுக்குடி, கீரனூர், கீழக்கொடுமலூர், தட்டனேந்தல், சாம்பக்குளம், செங்கப்படை. திருவரங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் முக்கிய பயிராக மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் ஜூன், ஜூலை மாதங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் துவங்குவது வழக்கம். இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மிளகாய், மல்லி போன்ற பயிர்களை பயிரிட துவங்கினர். களையை அகற்றுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர். இதனால் பயிர்கள் நன்றாக வளர துவங்கியது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் பயிர்கள் வெயிலுக்கு கருகி வாட துவங்கியது. இதனால் கண்மாய், ஊரணியில் கிடந்த மழை தண்ணீரை பம்புசெட் மூலம் அடித்தும், டிராக்டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி, கூலி ஆட்கள் மூலம் செடி தூர்களில் தெளித்து வந்தனர்.  இதனால்  மிளகாய், மல்லி நன்றாக விளைந்துள்ளது.

இதனை உலர்த்துவதற்கு கிராமங்களில் உலர்தளம் இல்லாததால், விவசாயிகள் காலியிடங்களில் காய வைக்கின்றனர், மண், குப்பை, தூசு போன்றவையால் மிளகாய் பாதிக்கப்படுவதால் விலை குறைவதாக கூறுகின்றனர். எனவே கிராமங்களில் மிளகாய் போன்ற தானியங்களை உலர்த்துவதற்கு உலர்களம் அமைக்க வேண்டும். கடும் வறட்சியிலும், விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி காப்பாற்றப்பட்ட செடியின் மூலம் வந்த மிளகாய்க்கு வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக உள்ளது. எனவே அரசு போதிய விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் மிளகாய் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கடலாடி, முதுகுளத்தூர் விவசாயிகள் கூறுகையில், கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவில் நெல் விவசாயத்திற்கு,  அடுத்தப்படியாக மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. போதிய மழையின்றி கடந்த 4 வருடங்களாக மிளகாய் விவசாயம் பொய்த்து போனது, கடந்த 2018-19ம் ஆண்டுகளில் 8 ஆயிரத்து 218 ஹெக்டேரில்  பயிரிடப்பட்ட மிளகாய் பயிர்களுக்கு, சுமார் 10 ஆயிரத்து 444 விவசாயிகள் அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் ஏக்கருக்கு ரூ.960 முதல் 1010 வரை பிரிமீயம் செலுத்தினோம். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகளாகியும், காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு பெய்த மழைக்கு பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் தொடர் மழையின்றி கருகியது. இதனால் கடன் வாங்கி தண்ணீர் பாய்ச்சி செடிகளை காப்பாற்றி விளைச்சல் செய்துள்ளோம். தண்ணீர் பாய்ச்சிய செலவு, கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட செலவுக்கு கூட, எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கிராமங்களில் உலர்களம் இல்லாததால் மிளகாயை காலி இடங்களில் காயவைப்பதால் ஈரப்பதத்துடனும், குப்பை, தூசுகள் இருப்பதால் வியாபாரிகள் விலை குறைத்து மதிப்பீடு செய்து வாங்குகின்றனர். மல்லியை உலர வைக்க சாலையை பயன்படுத்துவதால் விபத்து அபாயம் இருப்பதுடன், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்து வாங்க வேண்டும், கிராமங்களில் மிளகாய், மல்லி உள்ளிட்ட சிறுதானிய பயிர் உலர்களம் அமைக்க வேண்டும்  என்றனர்.

Tags : area ,Mudukulathur Sayalgudi , Chilli, coriander
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி