×

மினிவேன் தண்ணீர் சேவையை நிறுத்தியதால் குடிநீர் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

பெரம்பூர்: வட சென்னையில் குறுகிய தெருக்கள் கொண்ட பல பகுதிகளில் குடிநீர் வாரியம் சார்பில் மினி வேனில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை பகுதியில் அதிகளவில் குறுகிய தெருக்கள் உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரம்பூர் ஜெய்பீம் நகர் 1வது தெரு, 2 தெரு, 3வது தெரு மற்றும் வாசுதேவன் தெரு,  குருசாமி தெரு, ஆண்டியப்பன் தெரு உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால், இந்த பகுதியில் மினிவேன் வண்டிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த 31ம் தேதியுடன் இந்த சப்ளை நிறுத்தப்பட்டு, பெரிய லாரியில் தண்ணீர் கொண்டு வந்து சாலையின் முனையில் வந்து தண்ணீர் பிடித்துக் கொள்ளுமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை பெரம்பூர் தீட்டி தோட்டம் 1வது தெருவில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ‘‘எங்களது பகுதியில் மீண்டும் மினி வேனில் தண்ணீர் கொண்டு வந்த வழங்க வேண்டும்,’’ என கோஷமிட்னர். மேலும், எங்கள் பகுதியில் உள்ள பொது குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதால், அதை பயன்படுத்த முடியவில்லை. எனவே, அதை  உடனடியாக சரி செய்ய வேண்டும், என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

தகவலறிந்து வந்த திரு.வி.க நகர் போலீசார் அவர்களை  சமாதானம் செய்தனர். உடனடியாக அங்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த இரண்டு வருடங்களாகவே தொலைதொடர்பு சம்பந்தமான வேலை காரணமாக எங்கள் தெருவில் பள்ளங்கள் தோண்டுகின்றனர். அவ்வாறு தோண்டபடும் போது குடிநீர் வாரிய குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம்  தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, மினி வேன்களில் தண்ணீர் கொண்டு வந்து வழங்குவதையும் நிறுத்தி விட்டனர். இதனால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரை தூக்கி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.



Tags : Office ,Public Siege of Drinking Water Board ,blockade ,civilians ,Drinking Water Board , minivan stopped, water service, civilians
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...