×

காய்ச்சல் இருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுப்பு: சீனாவில் தவிக்கும் ஆந்திர மணப்பெண்

திருமலை: காய்ச்சல் அதிகம் இருப்பதாகக் கூறி விமானத்தில் ஏற்ற மறுப்பதால், சீனாவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆந்திராவின் விஜயவேமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (22). இவர், திருப்பதியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனத்தின் சார்பில் பயிற்சிக்காக சீனாவில் உள்ள வுகான் நகருக்கு ஜோதி உட்பட 58 ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பலர் உயிரிழந்த  நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு தனி விமானம் அனுப்பி வைத்தது. மத்திய அரசு அனுப்பிய விமானத்தில் ஜோதியும் வர வேண்டிய நிலையில் விமான நிலையத்தில் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், ஜோதியின் உடலில் வெப்பநிலை 37 டிகிரிக்கு மேல்  இருந்ததால் அவரை மட்டும் இந்தியா அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர். மற்றவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டனர்.

டிசிஎஸ் நிறுவன தொழிற்சாலை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹூவாய் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஜோதிக்கு வரும் 14ம் தேதி கர்னூலில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜோதி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார். இதற்கிடையே தன்னை மீட்கக் கோரி ஜோதி தன்னுடைய பெற்றோர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோவில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் என்னுடன் பணிபுரிந்த 58 பேர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விமானத்தில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் என்னை விமான நிலையத்தில்  உடலில் அதிக உஷ்ணம் இருப்பதாக  கூறி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் தற்போது உடல் வெப்ப நிலை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ்க்கான எந்தவித அறிகுறியும் இல்லாத நிலையில் மத்திய, மாநில அரசு என்னை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Airbus ,brides ,AP ,China , Airbus ,fly due, fever,China
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?