×

மோடியா, லேடியா என கேட்டதால் பாஜ கூட்டத்தில் அதிமுக பிரமுகருக்கு அடி, உதை

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மோடியா, லேடியா என கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகருக்கு சரமாரி அடி, உதை விழுந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பாஜ சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தகவல் தொழில்நுட்ப ஊடக பிரிவு மாநில செயலாளர் புட்டராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில செயலாளர் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த அதிமுக பிரமுகர் ஒருவர் மோடியா, லேடியா என கேள்வி எழுப்பினார். இதை கேட்டு ஆவேசமடைந்த அங்கிருந்த பாஜவினர், அதிமுக பிரமுகரை சுற்றி வளைத்து யார் நீ? என கேட்டனர்.

இதை கவனித்த போலீசார், போதையில் இருந்த அந்த நபரை பிடித்து கூட்டத்தின் வெளியே அழைத்துச் சென்றனர்.  அப்போது, பின்தொடர்ந்து சென்ற பாஜவினர் சிலர், அதிமுக பிரமுகரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை அழைத்து சென்றனர். அப்போது அடிவாங்கிய நபர் கூறுகையில், `என் பெயர் ராஜா, நான் திருச்சியில் அதிமுக அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக உள்ளேன். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை` என போதையில் உளறினார். இதையடுத்து, அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Modi ,Ladia ,meeting ,BJP ,kick ,Modia ,Lady AIADMK , Modi, BJP, AIADMK, blow, kick
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...