×

புதர்கள் மண்டி பாழடைந்த தெள்ளூர் சிவன் கோயிலை மீட்டெடுத்த உழவாரக்குழுவினர்: புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

வேலூர்: புதர்கள் மண்டி மண் மேடாகி போன தெள்ளூர் சிவன் கோயிலை காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் உழவாரப்பணி மேற்கொண்டு மீட்டெடுத்து சீரமைத்த நிலையில், இக்கோயிலை அரசு புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தெள்ளூர் கிராம மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழர்கள் ஆட்சியின்போது தொண்டை மண்டலத்தில் படுவூர் கோட்டம் பங்கள நாடு என்றழைக்கப்பட்ட இன்றைய வேலூர் பகுதியில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வேலூர் அடுத்த தெள்ளூரில் கட்டப்பட்ட சிவன் கோயில் பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்தது. கோயில் சிலைகளும் களவாடப்பட்டன. பல சிலைகள் உடைக்கப்பட்டு ஆங்காங்கே சிதறி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டதுடன், கோயிலும் முட்புதர்கள் மண்டி மண் மேடாகி போனது.

இந்த நிலையில், வேலூரை சேர்ந்த வரலாற்று மரபு நடை குழுவினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இக்கோயிலின் சிற்பங்கள், கல்வெட்டு செய்திகளை வெளிகொணர்ந்தனர். இதுதொடர்பான செய்தி கடந்த ஆண்டு தினகரன் நாளிதழில் வெளியானது. இச்செய்தியை படித்த பலரும் இக்கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ள முன்வந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த சிலர் அதற்கு முட்டுக்கட்டை போட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் 50க்கும் மேற்பட்டவர்கள் தெள்ளூர் வந்து மண் மேடாகி போன சிவன் கோயிலை உழவாரப்பணி மூலம் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். கோயிலை மூடியிருந்த மண் மேட்டை அகற்றியும், முட்புதர்களை அகற்றியும், கோயிலின் மேல் முளைத்திருந்த செடி, கொடிகளை அகற்றியும் கோயிலின் கட்டுமானத்தை பார்வைக்கு கொண்டு வந்ததுடன், கருவறையில் லிங்கம் இல்லாமல் இருந்த ஆவுடையார் மற்றும் அம்மன் சிலைகளுக்கு வழிபாடு நடத்தினர்.

இதுதொடர்பாக உழவாரப்பணி மேற்கொண்ட அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் மற்றும் உள்ளூர் மக்களிடம் கேட்டபோது, ‘இக்கோயில் அமைந்த பகுதியில் அகழாய்வு நடத்தினால் கோயிலின் சிதிலமடையாத சுவாமி சிலைகள் கிடைக்கலாம். மூலவர் லிங்கத்திருமேனியும் கிடைக்கலாம். அப்படி கிடைக்காவிட்டாலும் பக்தர்கள், நன்கொடையாளர்கள், அரசு இணைந்து இக்கோயிலை முழுமையாக புனரமைத்து வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர். இக்கோயில் குறித்து வரலாற்று ஆர்வலர்களிடம் கேட்டபோது, ‘இங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் மூலம் இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின்போது சோழர்களின் பகுதியாக படுவூர் கோட்டம், பங்களா நாட்டில் தெள்ளையுர என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இறைவனின் பெயர் ஊராங்குளுந்த நாயனார் என்பது.

விஜயநகர பேரரசின் காலத்தில் இக்கோயிலுக்கு மானியங்கள் அளிக்கப்பட்டுள்ளதும் கல்வெட்டு செய்திகள் மூலம் அறிய முடிகிறது’ நமது வரலாற்றை சொல்லும் இக்கோயிலை மீட்டெடுப்பதுடன், கல்வெட்டு செய்திகளை ஆவணப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : Tellur Shiva Temple ,devotees , Tellur Shiva Temple, The Ears
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்