×

தென்மாவட்ட மக்களின் பல்லாண்டு கனவு நிறைவேறுமா? தூங்கா நகரில் ‘தூங்கும்’ மெட்ரோ ரயில் திட்டம்

* சுமார் 25 லட்சம் மக்கள் பயனடைய வாய்ப்பு* மதுரை நகர் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வுமதுரை: தென்மாவட்ட மக்களின் பல்லாண்டு கால கனவான மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படாமலே உள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் தீரும் வாய்ப்புகள் இல்லாததால், அரசு பரிசீலிக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புராதனச் சிறப்புடன், ஆன்மிகப் பெருமை கொண்டது மதுரை மாநகரம். மதுரைக்குள் 148 சதுர கி.மீ. பரப்பளவிற்குள்ளும், விரிவாக்கப் பகுதிகளிலும் என 25 லட்சத்திற்கும் அதிக மக்கள் வாழ்கின்றனர். சர்வதேச விமானநிலையம், ஐகோர்ட் கிளை, ஐடி பூங்காக்கள் என மதுரை வளர்ந்திருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.வாகனப் பெருக்கம்மதுரை நகரையும் கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகள் விரிந்து போய் மொத்தமும் மதுரையாகவே இப்போது மாறிப்போயிருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் பெருக்கத்தைப் போலவே, வாகனங்கள் எண்ணிக்கையும் புற்றீசலாகப் பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக தொடர்கிறது. மதுரையில் ‘மோனோ ரயில் திட்டம்’ நிறைவேற்றப்படும் என்று 2011ல் தமிழக அரசு அறிவித்து, அது கனவுத் திட்டமாகவே கைகழுவப்பட்டது. பின்னாட்களில் இதனை மாற்றி, ‘மெட்ரோ ரயில் திட்டம்’ கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பிக்கிடக்கிற மதுரையில் ‘மெட்ரோ ரயில் திட்டம்’ வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றிட தொடர்ந்து மக்களின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.2வது பெரிய மாநகரம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த 2வது  பெரிய மாநகர பெருமைக்குரியதாக மதுரை இருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக  போக்குவரத்து நெருக்கடியாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்பெருமையும் மதுரைக்கு உண்டு. மதுரையில் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த இதுவரை  எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளும் போதுமான பலன் தராத நிலையில்,  வாகனப்போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ‘மெட்ரோ  ரயில் திட்டம்’ நிறைவேற்றுவதே தீர்வாக அமையும். மதுரை நகருக்குள் சாலைகள்  போதுமான அகலம் இல்லை. தேவைக்குரிய மேம்பாலங்களும் இல்லை. அரசுகள் தயக்கம்…சென்னை, இதைத் தொடர்ந்து கோவையில்   ‘மெட்ரோ ரயில் திட்டம்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரையில்  இத்திட்டத்தை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தாமதம் காட்டி வருவது தென்தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.  மதுரை மெட்ரோ ரயிலுக்கான பாதை திருமங்கலத்தில் தொடங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூர், கரடிக்கல் புதிய பஸ்போர்ட், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்நிலையம், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்,  ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்கலாம். இதுதவிர, திருப்புவனத்திலிருந்து, காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் ஐடி பார்க் செக்கானூரணி வரை என இரு வழித்தடங்களில் ரயில் இயக்கலாம்.  இதற்கான திட்டம் பொறியியல் வல்லுநர்களால் ஆய்வுக்கு உட்படுத்தி ஏற்கப்பட்டுள்ளது. சாலைகளின் மீது மேம்பாலம் கட்டி, மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்கபாதையிலும் தண்டவாளம் அமைத்து மெட்ரோ ரயிலை இயக்க முடியும். இதனை போக்குவரத்து வல்லுனர்கள் தங்கள் யோசனையாக அரசுக்கும் அளித்துள்ளனர். பொதுமக்கள் கூறும்போது, ‘‘தென்தமிழக மக்களுக்கு முக்கிய நகராக இருக்கும் மதுரையில், உரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. மதுரைக்குள், விரிவாக்கப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாது, வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்தும் தொழில், வணிகம், வேலைக்காக தினம் சுமார் 4 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுடன், சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் எகிறி நிற்கிறது, மதுரையின் முக்கிய வீதிகள் அனைத்துமே ஒருவழிப்பாதையாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நெரிசல் தீராத நிலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் மதுரை சிக்கித் தவித்து மூச்சு முட்டி நிற்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.பிரதமரின் 25 நகரங்களில் ஒன்றாகுமா மதுரை?தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘கடந்த  டிச.28ம் தேதி டெல்லி மெட்ரோ மேக்னெட்டா வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத  ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தபோது ஒரு அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். அதில், 2025ம் ஆண்டுக்குள்  மெட்ரோ ரயில் சேவையை 25க்கும் அதிக நகரங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாக  தெரிவித்துள்ளார். தமிழுக்குத் தலைநகராகவும், தமிழகத்தின் 2வது பெரிய  நகரமாகவும் விளங்கும் மதுரையை பிரதமர் மோடி, இந்த 25 நகரங்களில் ஒன்றாக  தேர்ந்தெடுத்து, இங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை உள்ள எந்த நகரத்திற்கும், மாநில அரசு மொத்தச் செலவில் 50சதவீதத்தை ஏற்று, அத்திட்டத்தை பரிந்துரைக்கும் பட்சத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவு படுத்தும் சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, மதுரைக்கான இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றிட வேண்டும்’’ என்றார்.   சிறப்பு மாடல் மெட்ரோ வருமா? மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு மிகவும் அவசியமானது. தற்போது மதுரை  – நத்தம் பறக்கும் சாலை பாலம் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் இன்னொரு மடங்கு பட்ஜெட் போட்டிருந்தாலே, இந்த நகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்திருக்கலாம். தவற விடப்பட்டிருக்கிறது. மதுரை போன்ற இரண்டாம் கட்ட மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு, மெட்ரோ ரயில் திட்டம்தான், மிகச்சிறந்த போக்குவரத்து திட்டமாக இருக்கும். வழக்கமான  மெட்ரோ திட்டத்தை விட, முதலீடு குறைந்த வடிவில் வடிவமைக்கப்பட்ட ‘சிறப்பு மாடல் மெட்ரோ’ அறிமுகமாகியுள்ளது. இத்திட்டத்தையாவது மத்திய அரசு மதுரைக்கு கொண்டு வர வேண்டும். மாநில அரசின் முயற்சிகளும் வேண்டும். இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார். …

The post தென்மாவட்ட மக்களின் பல்லாண்டு கனவு நிறைவேறுமா? தூங்கா நகரில் ‘தூங்கும்’ மெட்ரோ ரயில் திட்டம் appeared first on Dinakaran.

Tags : South District ,Dunga ,Madurai Nagar ,Madurai ,Dinakaran ,
× RELATED ஏரலில் நீர்மோர் பந்தல் சண்முகநாதன் திறந்து வைத்தார்