×

ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி. பைப்லைனில் கேஸ் கசிவு : பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றம்; செல்போன், மின்சார சேவைகள் துண்டிப்பு

ஆந்திரா: ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிப்பு மையத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக வாயு கசிந்து வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பிடி கிராமத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க உப்பிடி கிராமத்தில் மின்சாரம் மற்றும் செல்போன் டவர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அருகில் உள்ள முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

பயங்கர ஓசையுடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் வாயுவை நிறுத்த ஓ.என்.ஜி.சி. நிபுணர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பிடி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கேஸ் எடுக்க கிணறு ஒன்றை அமைத்தது. மத்திய அரசு மூலம் கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் தற்போது கேஸ் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. திடீரென உப்பிடி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் செல்லக்கூடிய அந்த கேஸ் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓஎன்ஜிசி அமைத்துள்ள பைப்லைன் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் அடிக்கடி இதுபோன்ற கேஸ் கசிவு ஏற்படுவதாகவும் இதனால் எந்த நேரத்தில் எங்கு கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Tags : ONGC ,leakage ,evacuation ,gas leak ,Andhra ,people evacuation ,oil well , Andhra, ONGC, oil well, gas leak, ONGC gas leak, people evacuation
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...