×

விமான நிலையத்தில் 1 கோடி தங்கம் கடத்தி வந்த ஊழியர் உள்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை  விமான நிலையத்தில் தனியார் உணவு விடுதி உள்ளது. அதில் தற்காலிக ஊழியராக பணியாற்றுபவர் விஜயகுமாரி (26). நேற்று முன்தினம் மாலை விஜயகுமாரி பணி முடிந்து வெளியில் செல்வதற்காக சென்னை  சர்வதேச விமான நிலையத்தில்  பணியாளர்கள் செல்லும் வழியில் வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது விஜயகுமாரியின் டீசர்ட் இடுப்பு பகுதியில் தூக்கிக்கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் பாதுகாப்பு அதிகாரி விஜயகுமாரியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை  செய்தபோது பாலீத்தின் கவர் சுற்றப்பட்ட பார்சல் தண்ணீர் சொட்ட சொட்ட இருந்தது.அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது 24 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. ஒவ்வொரு பிஸ்கட்டின் எடையும் 100 கிராம் வீதம் மொத்தம் 2.4 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹1 கோடி. உடனே அதிகாரிகள் விஜயகுமாரியை  பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  

விசாரணையில் விஜயகுமாரி தங்க பிஸ்கட் அடங்கிய பார்சலை சென்னை சர்வதேச விமான நிலைய வருகை பகுதியில் பெண்களுக்கான கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் நேற்று முன்தினம் காலையில் துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணி இவரை பார்த்து, ‘‘பெண்கள் கழிவறையில் ஒரு பார்சலை மறைத்து வைத்துள்ளேன். பணி முடிந்து வெளியில் வரும்போது அதை எடுத்து வா. நான் திரிசூலம்  ரயில் நிலையத்தில் காத்திருப்பேன். அங்கு இதை கொண்டு வந்து கொடுத்தால் ₹10000 தருகிறேன்’’ என்று கூறியதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தலில் ஈடுபட்டதாகவும் விஜயகுமாரி கூறினார். இதற்கிடையே மேலும் இருவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் ஆயிஷாபானு (32), இப்ராஹிம் (35) நேற்று முன்தினம் ஆகியோர் துபாயில் இருந்து சென்னை வந்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால்  கழிவறையில் தங்க கட்டிகளை மறைத்துவிட்டு வெளியில் வந்தனர். பின்னர் விஜயகுமாரியிடம் பேசி தங்க கட்டிகளை எடுத்துவரும்படி கூறியது தெரிந்தது. எனவே இருவரையும் விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
 
2 கிலோ தங்கம் பறிமுதல்
தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தது. பயணிகளை சுங்க அதிகரிகள் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த ரவி (48) சுற்றுலா பயணிகள் விசாவில் தாய்லாந்து சென்று விட்டு வந்தார்.  அவரது சூட்கேஸில் ரகசிய அறை இருந்தது. அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் எடை 1.200 கிராம். அதன் மதிப்பு ₹50.55 லட்சம். எனவே அவரை கைது செய்து தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில்  அதிகாலை 3.30 மணிக்கு இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது, அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அஜின் சரோக் (19)  என்பவர் 600 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 25.16 லட்சம். பின்னர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வந்தது.  அதில் சென்னையை சேர்ந்த ஜபீர் அலி (19) சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்தார். அவரை சோதனை செய்து 300 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 12.60 லட்சம். பின்னர் அவரையும் சுங்க அதிகாரிகள்  கைது செய்தனர்.

Tags : airport ,smuggler , employees, including, smuggler, airport
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்