×

பெண் தாசில்தாரை ‘ஹீரோயின்’ என கூறிய பாஜ மாஜி அமைச்சர்: சமூக வலைத்தளத்தில் பரவிய சர்ச்சை

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் பெண் தாசில்தாரை, பாஜ முன்னாள் அமைச்சர் ஹீரோயின் என வர்ணித்தது சர்ச்சையானது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள கர்கலா என்ற கிராமத்தில் நடந்த விவசாயிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பாஜ முன்னாள் அமைச்சர் பபன்ராவ் லோனிகர் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், ‘‘அரசிடமிருந்து  விவசாயிகள் 25 ஆயிரம் உதவி பெற வேண்டும் என்றால், மராத்வாடா பகுதியில் நாம் மிகப்பெரிய பேரணியை நடத்த வேண்டும். இதில் 25 ஆயிரம் பேர் முதல் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். இதில் பங்கேற்க முன்னாள்  முதல்வர் பட்நவிஸ், முன்னாள் அமைச்சர்கள் சந்திரகாந்த பாட்டீல், சுதிர் ஆகியோரை அழைக்கலாம். யாரை அழைக்க வேண்டும் என நீங்கள்தான் கூற வேண்டும். நாம் ஒரு ஹீரோயினை கூட அழைக்கலாம். இல்லையென்றால் நம்ம  ஹீரோயின் தாசில்தார் மேடத்தை அழைக்கலாம்’’ என்றார்.

பெண் அதிகாரி ஒருவரை, பாஜ முன்னாள் அமைச்சர் பபன்ராவ்,  ஹீரோயின் என வர்ணித்தது ஏற்ககூடியது அல்ல என தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு சர்ச்சையானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பபன்ராவ் லோனிகர், ‘‘நல்ல பணியை செய்பவர்களைத்தான் ஹீரோ அல்லது ஹீரோயின் என அழைப்போம். அந்த அர்த்தத்தில்தான் நான் கூறினேன். ஆங்கில அகராதியிலும் அந்த அர்த்தம்தான் உள்ளது. நீங்கள்  சரிபார்த்துக் கொள்ளலாம். நான் பெண் தாசில்தாரை புண்படுத்தவில்லை’’ என விளக்கம் அளித்தார்.

Tags : Baja Majidi ,Minister of Women , Baja Majidi, Minister , social website
× RELATED பெண் தாசில்தாரை ‘ஹீரோயின்’ என கூறிய...