×

மண்டைக்காடு கோயில் தெப்பக்குளம் சீராகுமா?: போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

திங்கள்சந்தை: குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்திலும் பிரசித்தி பெற்றது மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். இந்த கோயிலில் மாசிக்கொடை விழா ஆண்டுதோறும் 10 நாள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான விழா வரும் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. விழாவுக்கு தமிழகம், கேரளாவில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இருமுடி கட்டி வருவது வழக்கம். இப்படி வரும் பக்தர்கள் கோயில் பக்கத்திலுள்ள தெப்பக்குளம் மற்றும் கடலில் நீராடி அம்மனை தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு பெரிதும் பயனாக இருந்து வந்த இந்த குளம், கடந்த 10 ஆண்டாக சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் குளத்து நீரில் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குளத்து நீர் தேங்கி நிற்பதால், மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது.

அதோடு குளத்தின் அடிமடை வண்டல் மண்ணால் நிரம்பி உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோல் பேச்சிப்பாறை அணைநீர் குளத்திற்கு வரும் வழிப்பாதையும், அடிமடையும் மூடியுள்ளது. அதோடு சுமார் 5அடிக்குமேல் குளத்துக்குள் கழிவுபடிந்த மணல்கள், பொருட்கள் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் இந்நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குளத்தில் இருந்து கொடிய நோய் பரப்பும் கொசுக்கள் பரவி வருகிறது. மாசிக்கொடை விழாவிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சுகாதார பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அறநிலையத்துறை, பொதுப்பணிதுறை அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகளின் மெத்தனபோக்கால் பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மண்டைக்காடு பேரூர் காங்கிரஸ் தலைவர் சுந்தர் கூறியதாவது: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழாவுக்கு முன்பே தெப்பக்குளத்தை சீர்செய்வதுடன், தெருவிளக்கு, சாலை, சுகாதார வசதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும். கோயில் தெப்பக்குளத்தை தூர்வாரி அணைநீர் சீராக குளத்தில் வந்து செல்லவும்  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை விரைந்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : Mandapkad Temple Theppakkulam Will Become Stable: Congress Decides To Struggle
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...