×

உலகின் மூத்த குடி என நிரூபிக்கும் களமான சிவகளையில் விரைவில் தொல்லியல் கள ஆய்வு: கற்கால தமிழர் நாகரிகம் இனி கண்ணுக்கு புலப்படும்

தமிழர் நாகரிகம் பழமையானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும், அதை நிரூபிக்க தொல்லியல் ஆதாரங்கள் தேவை. அதற்காகத்தான் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி கரையில் அமைந்த ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு நடத்த வேண்டும் என தினகரன் நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாமிரபரணியின் கரையில் செழுமை நிறைந்து அமைந்துள்ள சிவகளை கிராமத்தின் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கிறது தமிழர்களின் கற்கால நாகரிகம். அடுக்கடுக்காக பல்வேறு தொல்லியல் எச்சங்கள் இங்கு புதைந்து கிடப்பதை சிவகளையைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரும் வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவருமான சிவகளை மாணிக்கம் கண்டறிந்தார்.இதற்காக இவர் காடு போதல், சிவகளை தொல்லியல் கழகம் என்ற அமைப்புகளை உருவாக்கி அதில் தனது நண்பர்களான சிவகளை விஜய், கிருபாநிதி கணேஷ், திருப்பதி வெங்கடாச்சலம், வெள்ளையப்பன், ரமேஷ், சண்முகசுந்தராஜா, கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், விக்னேஷ், பரும்பு சிவா,  ஜெபமாலை, வைகுண்டம் ஜெயக்குமார், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஆறுமுகபெருமாள், சிவகளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாராயணன், கணபதி சுந்தரராஜா, மீனாட்சிபட்டி மாணவர்கள் பார்வதிநாதன், இசக்கிமுத்து, தாணுசக்தி, பேட்மாநகரம் பாலசுந்தரராஜா, மூலக்கரை மயிலேறும்பெருமாள், சுப்பிரமணியன், ஏரல் சேகர் ஆகியோரின் உதவியுடன் சிவகளை பரும்பு பகுதியில் மேற்கொண்ட தேடல்களின் மூலம் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்யும் முயற்சியை துவக்கினார்.

இதுகுறித்த தகவல்களை புகைப்படத்துடன் மத்திய, மாநில தொல்லியல்துறைக்கு சிவகளை மாணிக்கம் தொடர்ச்சியாக அனுப்பி வந்தார். இதுகுறித்து தகவலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தினகரனில் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உத்தரவின் பேரில் தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் லோகநாதன் மற்றும் பாஸ்கர் இப்பகுதியை பார்வையிட்டு தமிழக தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதில், சிவகளையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் களம் இருந்ததற்கான தடயங்கள் பல காணப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளை அகழாய்வு செய்தால் மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம் என்றும் பழங்காலத்தில் சிவகளையின் வடக்கே தாமிரபரணி ஆறு ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனனர். இதைத்தொடர்ந்து இந்திய தொல்லியல்துறை அலுவலர்கள் டாக்டர் யத்தீஸ்குமார், டாக்டர் பிரசன்னா, கல்வெட்டாய்வாளர் வீரமணிகண்டன், நாகராஜன், கல்வெட்டு படியெடுப்பாளர் நசுருல்லா ஆகியோர் சிவகளையில் ஆய்வு செய்து இங்கு இடைக்கற்கால மற்றும் பெருங்கற்கால குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்ற அறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினர்.

மேலும் வழக்கும் தொடர்ந்தனர். நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையின் உயரதிகாரிகள் சிவகளை தொல்லியல் களம் குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.இந்நிலையில் சிவகளையை பார்வையிட்டு அறிக்கை செய்ய தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தலைமையில் இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறை அலுவலர்களும், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, திருச்செந்தூர் ஆர்டிஓ கோவிந்தராஜு, ஏரல் தாசில்தார் மலர்தேவன் அடங்கிய குழு அறிக்கையை தயார் செய்தனர். பின்னர் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ஆணையாளர் உதயச்சந்திரன் ஆகியோர் டெல்லி சென்று மத்திய அரசிடம் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடியை அகழாய்வு செய்ய அனுமதி கேட்டனர்.  இதில் ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடி போன்ற தொல்லியல் களங்களில் அடுத்த கட்ட அகழாய்விற்கும் சிவகளை தொல்லியல் களங்களில் முதற்கட்ட அகழாய்வு செய்வதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து தமழிர்திருவிழாவான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின் சிவகளையில் தொல்லியல்  கள ஆய்வு செய்யப்படும் என உதயசந்திரன் தெரிவித்துள்ளார். சிவகளை அகழாய்வு தமிழக பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகறியச் செய்ய பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  சிவகளை தொல்லியல் களத்தை பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பார்வையிட்டு சென்றுள்ளனர். குறிப்பாக பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் சாதிக், வரலாற்று ஆய்வுத்துறை தலைவர்கள் நசீர் அகமது, முகைதீன் பாட்சா, பேராசிரியர்கள் ஆஷா, ஆய்வு மைய ஒருங்கினைப்பாளர் சின்னத்தம்பி, நெல்லை ராணி அண்ணா கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை சிவசங்கரி ஆகியோர் அடங்கிய குழு சிவகளை தொல்லியல்களத்தை மாணவர்களுடன் வந்து ஆய்வு செய்தனர்.


Tags : Archaeological Survey , World's Oldest, Drinking Field
× RELATED 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்