×

உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சைகளுக்கு ஆதரவு அமைச்சர் கருப்பண்ணன் மீது முதல்வரிடம் 100 நிர்வாகிகள் புகார்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று 100 பேர், சந்தித்துப் பேசினர். அப்போது, ஈரோடு மாவட்டச் செயலாளரும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பண்ணன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக கருப்பண்ணன் செயல்பட்டார். நேரடியாக அவருக்கு ஆதரவு தெரிவித்தார். அதையும் மீறி அதிமுக வெற்றி பெற்றது. இதேபோல, கட்சிக்கு எதிராக அமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை கேட்டுக் கொண்ட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் புகார் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனால் கட்சி அலுவலகத்துக்கு 100 பேரும் சென்று புகார் செய்தார். கட்சியின் நிர்வாகிகள், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து புகார் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனால், அவர்கள் அனைவரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்குச் சென்றனர். அங்கு பன்னீர்செல்வம் மற்றும் பொன்னையன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் புகார் தெரிவித்தனர். புகாரை கேட்டுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அமைச்சராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கட்சிக்கு துரோகம் செய்தால், எப்படி கட்சி வளரும். சோதனையான இந்த நேரத்தில் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஈரோட்டில் நேற்று முன்தினம் போக்குவரத்துத்துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர், அமைச்சரிடம் தாங்கள் விழாவுக்கு வரமுடியாது என்று கூறிவிட்டனர். 2 எம்எல்ஏக்கள் அமைச்சர் விழாவை புறக்கணித்தால் நன்றாக இருக்காது என்று கூறி விழாவை அமைச்சர் கருப்பண்ணன் ரத்து செய்து விட்டு சென்றார். அமைச்சருக்கு எதிராக 2 எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வருகின்றனர். இது மூத்த தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : executives ,CM ,government ,election ,independents , 100 executives complained,CM , supporting independents,local government,election
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...