×

களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொலை 2 தீவிரவாதிகளை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 10 நாள் காவலில் எடுத்து டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் இருந்து 2 தீவிரவாதிகளும் விசாரணைக்காக மீண்டும் கேரள மாநிலம் அழைத்து செல்லப்பட்டனர். நேற்று காலை கோழிக்கோடு பகுதிகளில் விசாரணை நடத்தினர். கோழிக்கோடு சென்ற இவர்கள் அங்கு வைத்துதான் தங்களது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளனர்.

அப்துல்சமீம் தாடியை மழித்து தலைமுடியை முற்றிலும் குறைத்து மொட்டையடித்தது போன்று தனது உருவத்தை மாற்றினார். அதே போன்று தவுபிக்கும் தாடியை எடுத்து மீசையை குறைத்து தனது உருவத்தை மாற்றியிருந்தார். இதையடுத்து, கோழிக்கோட்டில் பய்யோளி என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான பியூட்டி பார்லருக்கு 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு பணியாற்றியவர்கள் இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர். மேலும் இங்கு இவர்களுக்கு உதவிய நபர்கள் யார் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.  இவர்களின் போலீஸ் காவல் இன்றுமுடிவதால்  நாகர்கோவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


Tags : SSI Wilson , SSI Wilson ,shot dead , Kaliyakkavil
× RELATED பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட...