×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபாதையில் மேற்கூரை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், சுவாமியை தரிசனம் செய்வதற்காக செல்லும் நடைப்பாதையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முத்தி தரும் தலங்களில் முதன்மை பெற்றது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று. பல்லவர் காலத்திலேயே இக்கோயில் சிறப்புற்றிருந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் போதிய வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்.

இக்கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து மட்டுமல்லாது, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால், தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பக்தர்கள் தரிசனம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பக்தர்களின் வசதிக்காக கோயில் நுழைவாயில் இருந்து உள்பிரகாரம் வரை பக்தர்கள் நடந்து செல்ல மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோன்று கோடைகாலத்தில் பக்தர்களின் வசதிக்காக நடைபாதையில் மேற்கூரை அமைக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் தரைவிரிப்பு போடப்பட்டிருந்தது.

இதனால், பக்தர்கள் ஓரளவுக்கு சிரமமின்றி கோயிலுக்குச் சென்றனர். ஆனால், இந்த ஆண்டு அதேபோன்று மேற்கூரை அமைக்கப்படாததுடன் நடைபாதையில் தரைவிரிப்பும் போடவில்லை. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நிம்மதியாக வழிபாடு செய்ய ஏதுவாக பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மேற்கூரை அமைப்பதுடன், தரைவிரிப்பும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபாதையில் மேற்கூரை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekamparanathar ,Temple ,Kanchipuram ,Kanchipuram Ekambaranatha ,Ekamparanathar ,Kanchipuram.… ,Kanchipuram Ekambaranathar Temple ,
× RELATED காஞ்சிபுரம் விஷார் கிராமத்தில்...