×

தேசத்துக்காக உயிர் நீத்த தியாகிகளை வணங்குவோம்: தேசிய தியாகிகள் தினம்

நம் தேசத்துக்காக எத்தனையோ தியாகிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். சிலர் ஆங்கிலேயர்களால் சித்திரவதை, தாக்குதலுக்குள்ளாகியும் உள்ளனர்.  இவர்களின் தியாகத்தை போற்றும் தினமே தேசிய தியாகிகள் தினமாக ஆண்டுதோறும் ஜன.30ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏன்? ஜன.30ம் தேதி என்கிறீர்களா?

நம் தேசப்பிதாவா மகாத்மா காந்தியடிகள் 1948, ஜன.30ம் தேதி, புதுடெல்லியில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், தியாகிகளை கவுரவிக்கும் தினமாகவும் ஆண்டுதோறும் ஜன.30ம் தேதி தேசிய தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சரி.. நம் தேசப்பிதா காந்தியடிகளை பற்றி தெரிந்து கொள்வோமே?

குஜராத் மாநிலம், போர்பந்தரில் 1869, அக்.2ம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இவருடைய தாய்மொழி குஜராத்தி. இவரது தந்தை கரம்சந்த் காந்தி, போர்பந்தரில் திவானாக  விளங்கியவர். பள்ளி பருவத்திலேயே காந்தி, படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். தனது 13வது வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட காந்தி, 18 வயதில் ‘பாரிஸ்டர்’  எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய  வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, தாயகம் திரும்பிய காந்தி,  பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1893ம் ஆண்டு அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்ரிக்காவில்  பணியாற்ற சென்றார். அப்போது டர்பன் நகரிலுள்ள  நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது என புறக்கணிக்கப்பட்டார்.

தொடர்ந்து ரயிலில் முதல் வகுப்பில்  பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும்  இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்தினார். பிறகு 1906ம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற  இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது  செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில்  தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட  மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும்  ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட்டது.

அப்போதுதான், இந்திய  விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்  போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர்ந்து தீவிர போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

1942, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என  அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.  காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு  திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947, ஆக.15ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், இந்திய  விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம்,  வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என  பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி  தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச்  செய்தவர் காந்தி. அவரை போன்ற எண்ணற்ற தியாகிகள், நாட்டின் விடுதலைக்காக போராட்ட களம் கண்டுள்ளனர். அவர்கள் வழியில் நாமும் நேர்மையுடன் பயணித்து அவர்களின் நினைவுப்படுத்தும் தினமான இன்று, அவர்களின் தியாகங்களே போற்றுவோம்.

Tags : martyrs ,National Martyrs' Day ,nation , Martyrs, Mahatma Gandhists, National Martyrs' Day
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயோகாஸ் ஆலை அமைக்க திட்டம்