சூரிய ஒளி எட்டாத இருளிலும் சில நுண்ணுயிர்கள், வேதியியல் செயல்பாடுகளால் உருவாகும் ‘இருண்ட ஆக்சிஜன்’ ஆழ்கடல் உயிரியல், சுரங்க சுற்றுச்சூழல் துவங்கி, புவி வேதியியல், விண்வெளி உயிரியல் வரை பலதரப்பட்ட துறைகளின் ஆராய்ச்சி வாய்ப்புகளைத் தந்து அதிசயிக்க வைக்கிறது. ஆக்சிஜன் என்பது மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் சுவாசத்திற்கும் உயிர்வாழ்விற்கும் இன்றியமையாத ஒரு வேதிய வாயு மூலக்கூறாகும். இது உடலில் ஆற்றல் உற்பத்திக்கும், உயிரணுக்களில் நடைபெறும் செரிமான செயல்முறைக்கும், உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஆக்சிஜன் உருவாவது இயற்கையிலும் அதாவது ஒளிச்சேர்க்கை மூலமாகவும், செயற்கையான அதாவது ஒளி வேதியியல், நீரின் மின்சரிவு, ஓசோன் சிதைவுறுதல் போன்ற செயல்முறைகளிலும் நடைபெறும்.
பொதுவாக, தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை (போட்டோசிந்தசிஸ்) வினையின் வாயிலாக காற்றிலுள்ள கார்பன் டைஆக்சைடை உட்கொண்டு வளிமண்டலத்திற்குத் தேவையான பெருமளவு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. ஆனால், சமீபத்திய அறிவியல் ஆய்வுகளில், சூரியஒளி எட்டாத முழு இருளான சூழல்களிலும் ஒளியின் உதவியின்றி சில நுண்ணுயிர்கள் மற்றும் வேதியியல் செயல்பாடுகள் ஆக்சிஜனை உருவாக்குகின்றன. சூரியஒளி இல்லா இத்தகைய இடங்களில் உருவாகும் இந்த ஆக்சிஜன்தான் இருண்ட ஆக்சிஜன் (டார்க் ஆக்சிஜன்) என தெரிய வந்துள்ளது. ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.
வேதியியல் துறை பேராசிரியர் பூவ.சண்முகவேலன் கூறியதாவது: கடலடிப் பகுதிகளில் உள்ள ஹைட்ரோதெர்மல் வெண்ட்ஸ் அருகில், அதிக வெப்பநிலையால் சில கனிமங்கள் தன்னிச்சையாக உடைந்து இருண்ட ஆக்சிஜனை வெளியிடுகின்றன. கடலின் ஆழத்தில் அழுத்தம் மிகவும் அதிகம். இந்த சூழலில், நீர் தானாகவே பிரிந்து இருண்ட ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இருளில் நடக்கும் ரசாயன சிதைவுகள்: பெராக்சைடு போன்ற வேதிப் பொருட்கள் இருளிலேயே இயற்கையாகச் சிதைந்தும் இருண்ட ஆக்சிஜன் உருவாகலாம். ஆழ்கடல் பகுதிகள், நிலத்தின் ஆழமான பாற் குழிகள், பனிமூடிய நிலைகள் மற்றும் ஒளி இல்லாத வெளி கிரகங்கள் ஆகியவைகள் இருண்ட ஆக்சிஜன் இருப்பதற்குத் தேவையான சூழல்களை வழங்கும். இந்த இருண்ட ஆக்சிஜன் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
பூமியின் ஆரம்பக் கட்டங்களில், சூரிய ஒளி கடலின் ஆழத்தை எட்டாத காலத்தில் உயிர் எவ்வாறு தோன்றியது என்பதைப் புரிந்து கொள்ள இது புதிய வழிகாட்டுதலாக செயல்படுகிறது. ஒளிச்சேர்க்கை தோன்றுவதற்கு முன்பே ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமாக இருந்திருக்கலாம் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. கடலின் ஆழமான பகுதிகளில், சூரிய ஒளி முற்றிலும் இல்லாத சூழலில் பல உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. இருண்ட ஆக்சிஜன் உயிரினங்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒளி இல்லாத வெளி கிரகங்கள் அல்லது பனி மூடிய சந்திரன்களிலும் உயிர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது என்பதை இது நிரூபிக்கிறது. ஒளி இல்லாத சூழலில் நுண்ணுயிர்கள் எவ்வாறு ஆற்றலை உருவாக்கி தங்கள் உயிரியல் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன என்பதற்கு இது ஆதாரமாக விளங்குகின்றது.
பூமியின் ஆக்சிஜன் சுழற்சி ஒளிச்சேர்க்கை மூலமாக மட்டுமே நடைபெறுகிறது என்ற பாரம்பரிய கருத்தை இது மாற்றியமைக்கிறது. உலோகத் தாது பரிமாற்றங்கள், மின்வேதியியல் வினைகள் மற்றும் புவி-ரசாயன செயல்முறைகளும் ஆக்சிஜன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்பதை இது உறுதி செய்கின்றது. சூரிய ஒளி இல்லாத சூழல்களில் உருவாகும் இந்த தனித்துவமான இருண்ட ஆக்சிஜன் கண்டுபிடிப்பு ஆழ்கடல் உயிரியல், ஆழ்கடல் சுரங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வேதியியல், கடல்சார் புவியியல் மற்றும் விண்வெளி உயிரியல் ஆகிய துறைகளில் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் உருவாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
ஆக்சிஜன் என்பது மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் சுவாசத்திற்கும் உயிர்வாழ்விற்கும் இன்றியமையாத ஒரு வேதிய வாயு மூலக்கூறாகும். இது உடலில் ஆற்றல் உற்பத்திக்கும், உயிரணுக்களில் நடைபெறும் செரிமான செயல்முறைக்கும், உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான பங்கு வகிக்கிறது.
இருண்ட ஆக்சிஜன் எப்படி உருவாகிறது?
ஆழ்கடலில் வாழும் சில நுண்ணுயிர்கள் சூரியஒளியின் உதவியின்றி நைட்ரஜன் சேர்மங்களை (நைட்ரிக் ஆக்ஸைடு டிஸ்முடேஷன் வினை) உடைப்பதன் மூலம் இருண்ட ஆக்சிஜனை உருவாக்குகின்றன. கடலடிப் பகுதிகளில் உள்ள ஹைட்ரோதெர்மல் வெண்ட்ஸ் அருகில், நீர் மற்றும் சூடான தாதுப் பாறைகள் ஒன்றுடன் ஒன்று வினைபுரியும் போது, ஹைட்ரஜன் பேரொக்ஸைடு மற்றும் சூப்பர் ஆக்ஸைடு போன்ற ஆக்சிஜன் சார்ந்த செயற்பொருட்கள் உருவாகின்றன. இவற்றை நுண்ணுயிர்கள் பிரித்து, இருண்ட ஆக்சிஜனை உருவாக்குகின்றன.

