×

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தேடப்படும் முக்கிய நபரான சித்தாண்டியை நெருங்கியது போலீஸ்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்படும் சித்தாண்டியை போலீஸ் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக உள்ள சித்தாண்டி ஐபிஎஸ் அதிகாரியின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர். ஐபிஎஸ் அதிகாரியின் செல்வாக்கை பயன்படுத்தி சித்தாண்டி தமது குடும்பத்தினர் 4 பேருக்கு அரசு பணி பெற்றது அம்பலமாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விவகாரம் தொடர்பாக 7-வது நாளான இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கியமாக இந்த முறைகேட்டில் சென்னையை சேர்ந்த காவலர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.  அவர் பெயர் சித்தாண்டி என்பதும், சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

சித்தாண்டியின் மனைவி, தம்பி, தம்பியின் மனைவி, மற்றொரு தம்பி என 4 பேர் கடந்த ஆண்டு குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மையத்தில்தான் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களை தேடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கையில் இவரது குடும்பத்தை தேடி விசாரிக்க சென்றபோது அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்தது.

இதனையடுத்து காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார் பதிவாளரின் நேர்முக உதவியாளராக பணிபுரியும் வேல்முருகனிடம் விசாரணை நடத்தினர். இவர், சித்தாண்டியின் தம்பி என்பதும், கடந்த ஆண்டு குரூப்-2ஏ தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையில் சித்தாண்டி, ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்நிலையில் சித்தாண்டியின் செல்போன் அழைப்பை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மூலம் ஆய்வு செய்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறிந்து தற்போது அவரை நெருங்கி கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.  தலைமறைவாக உள்ள சித்தாண்டி ஐபிஎஸ் அதிகாரியின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தது தெரிய வந்தது. அந்த ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி சித்தாண்டி தமது குடும்பத்தினர் 4 பேருக்கு அரசு பணி பெற்றது அம்பலமாகியுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தன ஊர் மக்கள் பலருக்கு குரூப்-2, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடாக தேர்ச்சிப்பெற வைத்து பல இடங்களில் அதிகாரியாக இவர், பதவி வாங்கிக்கொடுத்து இருக்கிறார் என்று தெரிய வந்தது. எனவே இந்த சித்தாண்டியை கைது செய்தவுடன் சம்மந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பிடிக்கும் நோக்கில் சிபிசிஐடி தீவீரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Tienpiesci Police ,Group-4 ,TNPSC ,The Group-4 , TNPSC, Group-4 selection, key person Siddhanthi, close, police
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு