×

பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜ.வில் சேர்ந்தார்: டிஆர்எஸ்.க்கு குடைச்சல் தர தயாராகிறது?

ஐதராபாத்: பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜ.வில் இணைந்துள்ளார். தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு குடைச்சல் தரவும், மாநிலத்தில் பாஜ.வை வளர்க்கவும் பிரபலங்களை பாஜ.வில் இணைக்கும் நடவடிக்கையாகவே சாய்னா சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். ஐதராபாத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2012ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று, பேட்மின்டன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இவரது கணவர், பாருபள்ளி காஷ்யப். இவரும் பேட்மின்டன் வீரர்தான். சாய்னா நேவால், விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், சாய்னா நேவால் நேற்று பாஜ.வில் இணைந்தார். இதற்காக டெல்லி வந்த அவர், பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் பாஜ.வில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை ஜே.பி.நட்டா வழங்கினார்.

பின்னர், சாய்னா அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடியைப் பார்த்துதான் நான் பாஜ.வில் இணைந்தேன். அவரைப்போன்ற ஒரு தலைவரால்தான் நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும்,’’ என்றார். தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், பாஜ.வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் அமைதியாக இருந்து வந்தார். இதனால் அம்மாநிலத்தை பாஜ பெரிய அளவில் கண்டுக் கொள்ளாமல் இருந்தது. இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களைப் போன்று தெலங்கானாவிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்காக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்ய உள்ளேன்,’’ என்றார். திடீரென சந்திரசேகர ராவ், பாஜ.வுக்கு எதிராக திரும்பி உள்ளதால், அவருக்கு குடைச்சல் தரவும், தெலங்கானாவில் பாஜ.வை வளர்ப்பதற்காகவும் பாஜ புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இதன்படி, மாநிலத்தின் முக்கிய பிரமுகர்களையும், பிரபலங்களையும், பாஜ.வில் கொண்டு வந்து சேர்த்து, ஆளுங்கட்சிக்கு எதிராக பேச வைப்பதுதான் அத்திட்டம் என்று கூறப்படுகிறது. இதனடிப்படையில்தான் சாய்னா நேவால் சேர்க்கப்பட்டுள்ளார். இனி அடுத்தடுத்து முக்கிய பிரபலங்கள் பாஜ.வில் இணையக்கூடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் பாஜ.வில் வளர்ச்சிக்கு சாய்னா நேவால் உறுதுணையாக இருப்பார் என பாஜ நம்புகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் கால் ஊன்றிவிட்ட பாஜக, அடுத்தாக தெலுங்கானாவை குறிவைத்து களம் இறங்கி உள்ளது. ஏற்கனவே, அங்கு நடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜ இடங்களில் வென்று அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

Tags : Saina Nehwal ,badminton hero ,BJP Celebrity ,TRS , Badminton Hero, Saina Nehwal, Baja., DRS
× RELATED அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு...