×

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் கைது

* 10 கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் வலை
* சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை: திருமண விழாவில் உடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கிய பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் புவனேஷை மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு ெசன்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே லாரி ஷெட்டில் பிரபல ரவுடி பினு 120 ரவுடிகள் புடைசூழ அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவத்தில் ரவுடி பினு கைதானார்.  இதன் பிறகு பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமாக திருவேற்காடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரியில் படிக்கும் நண்பன் ஒருவரின் திருமண விழா இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த திருமணத்தில் சக கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தனது நண்பன் திருமணத்திற்கு அன்பளிப்பாக 3 அடி நீள பட்டாக்கத்தியை மணமேடையில் மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கினர்.
அந்த பட்டாக்கத்தியை பெற்றுக் கொண்ட மணமகன் திருமணத்திற்கு வந்த அனைவர் முன்பும் தான் பெரிய ரவுடி என்று அறிவிக்கும் வகையில் பட்டாக்கத்தியை உயர்த்தி காட்டினார். அப்போது உடன் படிக்கும் சக நண்பர் ஒருவரும் பட்டாக்கத்தியை சுழற்றியபடி கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நடனமாடி கொண்டாடினர்.

பின்னர் நண்பர்கள் சூழ மணமகன் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பட்டாக்கத்தியால் மண மேடையில் கேக் வெட்டி தனது மனைவிக்கு ஊட்டினார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் உடன் படிக்கும் நண்பர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பிறகு திருமணத்திற்கு வராத உடன் படிக்கும் சக நண்பர்களுக்கு பட்டாக்கத்தி அன்பளிப்பு வழங்கிய வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து திருவேற்காடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணங்கள் குறித்து அனைத்து மண்டபங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது திருவேற்காடு அடுத்த சின்ன கோலடியை சேர்ந்த புவனேஷ் மற்றும் நந்தினி என்ற ஜோடிக்கு திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டா கத்தியால் கேக் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டில் விருந்துக்கு சென்று இருந்த மணமகன் புவவேசை அதிரடியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். பட்டாக்கத்தியால் புவனேசுடன் கேக் வெட்டிய அவரது மனைவி நந்தினி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது :  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட் தல வைத்திருப்பதால் திருவேற்காடு, பூந்தமல்லி, எம்.எம்.டி.ஏ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னாள், தற்போது ரூட் தல மாணவர்கள் கும்பலாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது என்றும் பூந்தமல்லி பகுதி ரூட் தல புவனேஷ் தான் என்று கூறி 3 அடி பட்டாக்கத்தியை கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பரிசு அளித்தனர். பிறகு மணமேடையிலேயே கேக் வைத்து பரிசு அளித்த பட்டாக்கத்தியால் புவனேஷ் மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோர் கரகோஷங்களுடன் கேக் வெட்டியது தெரியவந்தது. மேலும், மணமேடையில் தம்பதியுடன் கத்தியை சுழற்றிய பச்சையப்பன் கல்லூரி மாணவன் மோகன்குமார் என்பதும் ஏற்கனவே அரும்பாக்கம் பகுதியில் நடந்த ரூட் தல பிரச்சனையில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மோகன்குமார் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : mother-in-law ,Bride , Bride's arrested ,cracking cake, mother-in-law
× RELATED பெண் காவலர்கள் மீது எஸ்.பி யிடம் மாமியார் புகார்