×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் ஓடும் காரில் விடைத்தாள் திருத்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் 9,398 இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது. நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அங்கு தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெயிலானார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இந்த மையங்களில் கண்டிப்பாக முறைகேடு நடந்திருக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேரை டிஎன்பிஎஸ்சி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 99 பேரும் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது தெரியவந்தது. இந்த முறைகேட்டின் பின்னணியில் பெரிய அளவில் இடைத்தரகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஈடுபட்டது உறுதியானதால் இந்த வழக்கு தமிழக அரசு உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் தலைமையில், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்களில் 65 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் மூலமே இம்முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட, டிபிஐ அலுவலக உதவியாளராக பணியாற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21), ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன் (38),திருவாடானை தாலுகா, கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிறுகிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்த மு.காலேஷா (29) ஆகிய 7 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சீனிவாசன், சிவராஜ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ரெக்கார்டு கிளார்க்காக பணியாற்றி வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சோந்த ஓம்காந்தன்(45) மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக நேற்று காலை ஓம்காந்தன் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் முறைகேட்டிற்கு என தனியாக பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செல்போனில் தேர்வு எழுதிய நபர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பலரிடம் ஓம்காந்தன் பல முறை பேசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நேற்று அதிகாலை அதிரடியாக ஓம்காந்தனை கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தயாக இருந்த தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலசுந்தர்ராஜ்(45) என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்வரிடம் இருந்து 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வில் மட்டும் 10 கோடிக்கு மேல் பணம் கைமாறி உள்ளது.  கைது செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கும் இந்த முறைகேடு விவகாரத்தில் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் மிகவும் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.  அவர்களை உடனடியாக கைது செய்தால், பிரச்னை மேலும் விஸ்வரூபம் ஆகும் என்பதால், தற்போதைய சூழ்நிலையில் அவர்களை தீவிரமாக சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் அனைவரையும் கைது செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

டிபன், டீயில் கவிழ்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்
முக்கிய குற்றவாளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் அளித்த வாக்கு மூலம் குறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியில் சேர்ந்த ஓம்காந்தனுக்கு டி.பி.ஐ.யில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவர் மூலம் சென்னை முகப்பேரில் குடியிருக்கும் ஜெயகுமார் என்பவருக்கு 2018ம் ஆண்டு ஆறிமுகமானார். பிறகு கடந்த 2019ம் ஆண்டு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அப்போது ஜெயகுமார் தனது தெரிந்த நபர்களுக்கு குரூப்-4 தேர்வில் முறைகேடாக வெற்றி ெபறுவதற்கு ஓம்காந்தனிடம் உதவி கேட்டார். இதற்காக ஜெயகுமார் 15 லட்சம் பணம் தருவதாக கூறி 2 லட்சம் ரொக்க பணத்தை ஓம்காந்தனிடம் கொடுத்தார்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் அமையும் தேர்வு மைய பணியை தேர்வு செய்ய ஓம்காந்தனிடம் கூறியுள்ளார். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக ராமேஸ்வரத்திற்கு காரில் சென்ற ஜெயக்குமார், தன்னிடம் பணம் கொடுத்த தேர்வர்களுக்கு விரைவில் எழுத்து மறைந்துவிடும் மை கொண்ட பேனாக்களை கொடுத்துள்ளார். தேர்வு முடிந்த பின்பு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து விடைத்தாள்களை பெற்று சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்படைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த தட்டச்சர் மாணிக்கவேலுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஓம்காந்தனும் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக ராமேஸ்வரத்தில் ஜெயக்குமாரை சந்தித்துள்ளார்.

இருவரும் திட்டமிட்டபடி தேர்வு முடிந்த பின்பு அதாவது 1.9.2019 அன்று இரவு 8 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்தில் இருந்து குரூப்-4 விடைத்தாள் பண்டல்களை ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் வாகனத்தில் ஏற்றி இதன் சாவியை ஓம்காந்தன் வைத்துக்கொண்டார். வழக்கமாக பொறுப்பு அதிகாரிகள் தான் சாவியை வைத்திருப்பார்கள். பின்னர் விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனத்தை ஜெயகுமார் காரில் பின் தொடர்ந்துள்ளார். விடைத்தாள் ஏற்றி சென்ற வாகனம் அன்று இரவு சிவகங்கை மாவட்டம் கருவூலத்தில் இரவு 9.50 மணிக்கு அந்த மாவட்ட குருப்-4 விடைத்தாள் பண்டல்களை பெற்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் சிவகங்கையை தாண்டி சாலையோரம் வாகனத்தை நிறுத்தி அதில் சென்ற தட்டச்சர் மாணிக்கவேல், விடைத்தாள் ஏற்றி சென்ற ஏ.பி.டி. நிறுவன வாகன ஓட்டுனர், பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் ஆகியோரை திட்டமிட்டப்படி ஓம்காந்தன் சாலையை தாண்டி எதிர்புறம் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றார். பிறகு அனைவரையும் ஓட்டலில் சாப்பிட வைத்துவிட்டு ஓம்காந்தன் மட்டும் விடைத்தாள் ஏற்றி வந்த வாகனத்தின் சாவியை காரில் பின் தொடர்ந்து வந்த ஜெயகுமாரிடம் கொடுத்தார்.

பின்னர் ஜெயகுமார் விடைத்தாள் ஏற்றி வந்த வாகனத்தின் பூட்டை திறந்து அதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களை சேர்ந்த விடைத்தாள் பண்டல்களை எடுத்து காரில் வைத்து கொண்டு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார். அதன் பிறகு ஓம்காந்தன் ஓட்டலுக்கு சென்று ஏற்கனவே சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுடன் ஒன்றும் தெரியாததுபோல சாப்பிட்டுவிட்டு சுமார் அரை மணி நேரம் கழித்து விடைத்தாள் இருந்த வாகனம் இருந்த பகுதிக்கு அழைத்து வந்தார். பின்னர் பார்சல் வாகனத்தில் சென்னைக்கு புறப்பட்டனர்.

மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரும் போது, டீ குடித்துவிட்டு செல்லலாம் என்று ஓம்காந்தன் சாலையோரம் உள்ள ஒரு டீக்கடை ஓரம்  நிறுத்தும்படி விடைத்தாள் ஏற்றி வந்த ஓட்டுநரிடம் கூறினார். அதன்படி ஏ.பி.டி. வாகன ஓட்டுநரும் வாகனத்தை நிறுத்தினார். அப்போது, சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் காரில் பின் தொடந்து வரும்போதே ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களில் கேள்விக்கான சரியான பதிலை விடைத்தாளில் பதிவு செய்து, வாகனத்தின் பூட்டை திறந்து அதில் ஒன்றுமே தெரியாததுபோல வைத்துவிட்டார். பின்னர் பார்சல் வேன் சாவியை ஜெயகுமார் யாருக்கும் தெரியாமல் ஓம்காந்தனிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதபடி காரில் சென்றுவிட்டார். அதைதொடர்ந்து மறுநாள் 2.9.2019 மதியம் 1.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ஓம்காந்தன் அளித்த வாக்குமூலம் குறித்து சிபிசிஐடி போலீசார் கூறினர்.

Tags : DNBSC Group 4 ,Group 4 Examination ,Answer Sheet Revision , DNPSC, Group 4 Examination, Abuse Issue, Running Car, Answer Sheet Revision
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...