×

திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு துடிக்கிறது: ரகுபதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், எம்எல்ஏ

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது; தமிழக விவசாயிகளுக்கு ஆபத்தானது; விவசாயத்தை  அடியோடு அழித்து விடும் என்று பல கட்ட போராட்டங்களை பல கட்சிகளும், பல விவசாய அமைப்புகளும் நடத்தி வந்தன. இந்த போராட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின் விளைவாகத்தான் டெல்டா மாவட்டங்களில் இந்த திட்டத்தை ெகாண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு இதை அடியோடு விடுவதாக தெரியவில்லை.  பல வழிகளில் கொண்டு வர முயற்சி நடக்கிறது. அதில், ஒன்று தான் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்ட திருத்த சட்டமும் ஒன்று. டெண்டர் எடுத்தால் போதும்; மக்களின் கருத்தை கேட்கவே தேவையில்லை என்பது தான் இந்த திருத்தம்.  மக்கள் போராட்டம் காரணமாக தான் இந்த திட்டம் தடைபட்டது என்பதால்,  மக்கள் கருத்தை கேட்க தேவையில்லை என்று மத்திய அரசு மிக சாமர்த்தியமாக கூறியுள்ளது. இதன் மூலம் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு துடிப்பது தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதி பசுமை நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இங்கு, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டம் முழுவதும் உணவு உற்பத்தி கடுமையாக பாதிப்படையும். இதை மத்திய அரசு புரி்ந்து கொண்டதாக தெரியவில்லை; பிடிவாதமாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்று சூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக உள்ளது. அடுத்தவர்களின் நிலத்தில் எந்த வித அனுமதியும் இன்றி ஆய்வு என்ற பெயரில் நுழைவது சர்வாதிகார போக்கை காட்டுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து போராடும் நிலையில் மத்திய அரசு திரும்ப, திரும்ப மக்கள் உணர்வுகளை நசுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்து வரும் 28ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திலகர் திடலில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. டெல்டா பகுதிகளை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை நோக்கி வைத்த வண்ணம் இருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என்று பல போராட்டங்களை கையில் எடுத்தனர். ஆனால் மத்திய அரசு  இந்த திருத்தத்தின் மூலம் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளின் குரல்வளையை நெரித்து வருகிறது.

விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற டெல்டா பகுதிகளை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தையும் இணைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்க கூடாது. விவசாயிகளின் விளை நிலங்களை அவர்களின் எண்ணப்படி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் நிலத்திற்குள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த கூடாது. மத்திய, மாநில அரசுகள் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் தொடர்போராட்டத்தை சந்திக்க நேரிடும்.

Tags : Officer ,Pudukkottai South District ,DMK ,MLA ,Raghupathi ,Pudukkottai ,South District ,Central Government , Central Government, beats, Raghupathi, Pudukkottai, South District DMK in charge , executing the project
× RELATED காட்டுமன்னார் கோயில் அருகே...