×

உயிரிழப்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகம்: பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் வெறி பிடித்து திரியும் நாய்கள்... ரேபிஸ் வைரஸ் பரவும் பீதியில் பொதுமக்கள்

வேலூர்: பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாப்பிடும் தெருநாய்கள் வெறிப்பிடித்து திரிவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலைகளில் ஆங்காங்கே தெருநாய்கள் கும்பலாக சுற்றித்திரிகிறது. இவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் பைக்கில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் விரட்டி கடிக்கிறது. மேலும் வாகனங்களின் குறுக்கே திடீரென புகுந்துவிடும் நாய்களால் விபத்துகள் அதிகரிக்கிறது. இதனால், பலர் காயமடைந்து வீடு திரும்புகின்றனர்.

சில இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது. எனவே, கருத்தடை அறுவை சிகிச்சைகள் மூலம் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளை சாப்பிடுவதால் நாய்கள் சொரி மற்றும் வேகமாக பரவும் ரேபிஸ் வைரஸால் வெறியும் பிடித்து திரிவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நாயிடம் கடிபடுபவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் வெறிநாய் கடியால் ரேபிஸ் வைரஸ் பரவி உயிரிழப்பவர்களில் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்தான் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதுபோன்ற வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியமானது. எனவே, பொது இடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. நாய்களுக்கு நோய் பரவுவது குறித்து கால்நடைத்துறை மருத்துவர்களிடம் கேட்டபோது: ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய்கள் யாரையாவது கடித்தால்தான் வைரஸ் பரவும் என்பதில்லை.

பாதிக்கப்பட்ட நாய்கள், நக்குவதால் எச்சில் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, நாய்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் விளையாடும்போது பற்களால் மனிதர்களுக்கு காயம் ஏற்படுத்தினாலும் ஊசி போட்டுக்கொள்வது கட்டாயம். அதேபோல், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசி போடவேண்டும். நாய்கள் சாப்பிடும் உணவுகளாலும் சொரி பிடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகள் மற்ற நாய்களுக்கும், மனிதர்களுக்கும் பரவும்.நாய்கள் மீது உண்ணி போன்ற பூச்சிக்கள் இருந்தால், தேவையான மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

இந்த உண்ணிகள் மனிதர்களையும் கடிக்கும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதேபோல் பச்சையான இறைச்சியை நாய்கள் சாப்பிடுவதால் சொரி பிடிப்பது, வெறி பிடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக பொது இடங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளில் உள்ள பித்தப்பை உறுப்பை சாப்பிடுவதால் நாய்களை நச்சுத்தன்மை தாக்குகிறது. நாய்களை தாக்கும் பாதிப்புகள் மனிதர்களுக்கும் பரவ அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. எனவே, பொது இடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கு நாய்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நம் வீட்டில் ஒருவராக நினைத்து நாய்களை பராமரிக்கும் மனநிலை அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஊசி போடுவதில் சிக்கல்: நாய் கடிக்கு தொப்புளை சுற்றிலும் 16 ஊசிகள் போட வேண்டும் என்ற நிலை மாறி, 3 ஊசிகள் போதுமானது என்ற அளவுக்கு வந்துவிட்டது. ஆனால், நாய் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் உடனடியாக ஊசி போடுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. ஒரு பாட்டிலை திறந்தால் குறிப்பிட்ட நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்த வேண்டும். இதனால், 2 அல்லது 3 பேர் மட்டுமே நாய்கடி ஊசி போடுவதற்கு வந்தால், நாளை வரும்படி திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம்.

அதேபோல், சில அரசு மருத்துவமனைகளில் நாய்கடிக்கு ஊசி இருப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. நாய்கடிக்கு ஊசியால் போடப்படும் மருந்தின் விலை ₹3 ஆயிரம் வரை இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால், பலர் ஊசி போட்டுக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறார்களாம். எனவே, நாய்கடிக்கு ஊசி போடுவதில் இருக்கும் சிக்கல்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : children ,deaths ,places ,public , Meat waste, dogs, rabies virus
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...