×

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் செங்கல் சுவர்களை அகற்றியதில் தென்படும் அழகிய கற்சிற்பங்கள்: தூய்மைப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை

வேலூர்: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் உள்ள பஸ், ரயில் நிலையங்கள் வைபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மொத்தம் ரூ1,415 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் ரூ30 கோடி மதிப்பில் வேலூர் கோட்டையில் அகழி தூர் வாருவது, எல்இடி மூலம் வரலாற்று நிகழ்வுகளை திரையிடுவது, கோட்டையின் உண்மை வடிவம் சீர்குலையாமல் அழகுப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் ஆங்கிலேயேர்கள் பயன்படுத்திய சிறைச்சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக, சுண்ணாம்பு கலவையுடன் செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட சுவர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் செங்கல் சுவர்களுக்கு உள்ளே மறைந்திருந்த மயிலுடன் கூடிய முருகன், வரலாற்று நிகழ்வுகள் உள்ளிட்ட அழகிய சிற்பங்கள் மற்றும் கற்தூண்களின் முழுவடிவம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை வளாகத்தில் 6 பக்கங்களில் மண்டபங்கள் இருந்துள்ளது. இந்நிலையில், பிரட்டிஷ் ஆட்சி காலத்தில் கோட்டையில் சுண்ணாம்பு கலவையுடன் செங்கல் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், சிறைச்சாலை அமைக்க அங்குள்ள ஒரு மண்டபத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் சிறைச்சாலை வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிற்பங்களுடன் கூடிய கற்தூண்களின் மீது செங்கல் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது கற்தூண்கள் மற்றும் சிற்பங்கள் சிதிலமடையாமல் அந்த சுண்ணாம்பு சுவர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து அங்குள்ள மண்டபம் முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என்றனர்.

புரட்சியாளர்களின் சடலங்கள் எங்கே?
வேலூர் கோட்டையில் கடந்த 1806ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் 100 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்திய வீரர்கள் 350க்கும் மேற்பட்டோர் வீர மரணமடைந்தனர். புரட்சியின்போது கொல்லப்பட்ட பிரிட்டிஷாரின் உடல்கள் கோட்டைக்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய வீரர்களின் உடல்கள் எங்கு அடக்கம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல்கள் இல்லை. இதனால், கோட்டை வரலாறு குறித்து ஆழமான ஆராய்ச்சிகள் தேவை என்பதே பலரின் கோரிக்கை.

இந்நிலையில், வேலூர் கோட்டையில் மீன்வளத்துறை உதவி இயக்குனரகம் இயங்கி வந்த அலுவலகம் எதிரே மண்ணில் புதைந்திருந்த பாதாள அறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்தது. இதை டில்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் பார்வையிட்டனர். பின்னர் ஆராய்ச்சி செய்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் இதுவரை வரவில்லை. இதுகுறித்தும் ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,Vellore Fort ,brick walls , Vellore Fort, brick wall and beautiful stone carvings
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...