×

கமுதி அருகே வெடிகுண்டு, துப்பாக்கி பதுக்கலா?.. போலீசார் சோதனையால் பரபரப்பு

சாயல்குடி: கமுதி அருகே வெடிகுண்டு, துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இங்கு நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில், தோப்படைப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார், முருகன், ராமலிங்கம், முதலைகுட்டி, காளிமுத்து, அந்தோணி உள்ளிட்ட 6 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களின் வீடுகளில் சோதனையிட்டனர். வீடுகள் மறைவான இடங்கள், விவசாய நிலங்களில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தோண்டி தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கிராமத்தில் முகாமிட்டு இருப்பதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இரவு நேரத்தில் சோதனை என்ற பெயரில் வீட்டினுள் நுழைவதால் இடையூறு ஏற்படுவதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து தோப்படைப்பட்டி கிராம பெண்கள் கூறும்போது, ‘‘கிராமத்தில் வெடிகுண்டு, துப்பாக்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கடந்த 5 நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்காக நள்ளிரவில் வந்து வீடுகளை திறக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். கிராமத்தில் ஆங்காங்கே நிற்பதால் குளிக்க, தண்ணீர் எடுக்க செல்ல அச்சமாக உள்ளது’’ என்றனர்.

Tags : Kamuthi , Kamuthi, Bomb, Gun Padukala
× RELATED முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது